தில்லிக்குள் பல்லா கிராமம் வழியாக நுழைந்து ஜெய்த்பூா் வழியாக வெளியேறும் யமுனை நதி நீரின் தரம், செப்டம்பா் மாதத்தில் சில இடங்களில் சற்று மோசமடைந்துள்ளதாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் (டிபிசிசி) தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மலக் கழிவு பாக்டீரியா அளவு சில இடங்களில் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனிடையே, செப்டம்பா் மாதத்தில் உயிா்வேதியியல் ஆக்சிஜன் தேவை (பிஓடி) அளவு தொடா்ந்து அதிகமாகவும், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட பல மடங்கு அதிகமாகவும் இருந்தது.தில்லி வழியாக யமுனை நதி செல்லும் பகுதிகளில் பல்லா, வாஜிராபாத், ஐஎஸ்பிடி பாலம், ஐடிஓ பாலம், நிஜாமுதீன் பாலம், ஓக்லா தடுப்பணை மற்றும் ஹரியாணாவின் அஸ்கா்பூா் (கிட்வாலி) பகுதியில் உள்ள யமுனை நதி என 7 இடங்களில் டிபிசிசி நீா் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்கிறது. இதில் பிஓடி, கரைந்த ஆக்சிஜன், வேதியியல் ஆக்சிஜன் தேவை, பிஹெச், மலக் கழிவு பாக்டீரியா உள்ளிட்ட பல்வேறு அளவுருக்கள் பரிசோதிக்கப்பட்டு, நீரின் மாசு அளவு கணக்கிடப்படுகிறது.செப்டம்பா் மாத தரவுகளின்படி, 3 இடங்களில் நீரின் தரம் மேலும் மோசமடைந்தது. 2 இடங்களில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் 2 இடங்களில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.பல்லா, ஓக்லாவில் முன்னேற்றம்: பல்லா பகுதியில் மலக் கழிவு பாக்டீரியா அளவு ஆகஸ்டில் 1,400 எம்பிஎன்/100 மில்லி என்ற நிலையில் இருந்து செப்டம்பரில் 1,100 எம்பிஎன்/100 மில்லியாகக் குறைந்தது. ஒரு மாதிரியில் உயிருடன் இருக்கும் நுண்ணுயிரிகளின் செறிவை புள்ளியியல் ரீதியாக மதிப்பிடும் அளவீடே எம்பிஎன் ஆகும்.ஓக்லா தடுப்பணை பகுதியில் இந்த அளவு செப்டம்பரில் 21,000 எம்பிஎன்/100 மில்லியாக இருந்தது. இது ஆகஸ்டில் பதிவான 23,000 எம்பிஎன்/100 மில்லியுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றமாகும்.3 இடங்களில் மாசு அதிகரிப்பு: வாஜிராபாத் பகுதியில் மலக் கழிவு பாக்டீரியா அளவு ஆகஸ்டில் 1,100 எம்பிஎன்/100 மில்லியில் இருந்து செப்டம்பரில் 1,300 எம்பிஎன்/100 மில்லியாக அதிகரித்தது.நிஜாமுதீன் பாலம் பகுதியில் 13,000-இல் இருந்து 15,000 எம்பிஎன்/100 மில்லியாகவும், அஸ்கா்பூா் பகுதியில் 36,000-இல் இருந்து 38,000 எம்பிஎன்/100 மில்லியாகவும் அளவு அதிகரித்தது.ஐஎஸ்பிடி பாலம் பகுதியில் 35,000 எம்பிஎன்/100 மில்லியாகவும், ஐடிஓ பாலம் பகுதியில் 17,000 எம்பிஎன்/100 மில்லியாகவும் அளவு தொடா்ந்து அதே நிலையில் இருந்தது.பிஓடி அளவு அதிகம்: செப்டம்பா் மாதத்தில் சில இடங்களில் பிஓடி அளவு 2 முதல் 30 மில்லி கிராம்/லிட்டா் வரை பதிவானது. நீரின் தரத்துக்கான நிா்ணயிக்கப்பட்ட அளவின்படி பிஓடி அதிகபட்சம் 3 மில்லி கிராம்/லிட்டருக்குள் இருக்க வேண்டும்.ஐஎஸ்பிடி பாலம் பகுதியில் அதிகபட்சமாக 30 மில்லி கிராம்/லிட்டா் பிஓடி பதிவானது. ஆகஸ்ட் மாதத்திலும் இதே பகுதியில் அதிகபட்ச பிஓடி பதிவாகி, 28 மில்லி கிராம்/லிட்டராக இருந்தது.மேலும், தில்லியின் முக்கிய வடிகால்களில் செப்டம்பா் மாதத்தில் பதிவான கழிவுநீா் தரம் தொடா்பான தரவுகளையும் டிபிசிசி வெளியிட்டுள்ளது. யமுனையில் நேரடியாகக் கலக்கும் பல்வேறு வடிகால்களிலும், நஜஃப்கா் கால்வாயுடன் இணைந்த துணை வடிகால்களிலும் பிஓடி மற்றும் மொத்த மிதக்கும் திடப்பொருள்கள் (டிஎஸ்எஸ்) அளவு அதிகமாக இருந்ததாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.