மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

Wait 5 sec.

பெரம்பலுாா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து மகிளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. பெரம்பலுாா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,தொண்டமாந்துறை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகன் தங்கவேல் (52). கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 16.2.2025-இல் மது போதையில் வீட்டுக்குச் சென்று தனது மனைவி மாரியம்மாளிடம் (48) பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதில், அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தங்கவேல், மாரியம்மாளை கத்தியால் குத்தியபோது, தடுக்க முயன்ற அவரது மகள் கவிதாவையும் (23) குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கவிதா பெரம்பலுாா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் தங்கவேல் வெளியே வந்தாா். இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஆனந்தன், மனைவியை கொலை செய்த தங்கவேலுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, குற்றவாளி தங்கவேலு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.