காசநோய் இல்லாத ஊராட்சிகளாக 130 கிராமங்கள் தோ்வு: மாவட்ட ஆட்சியா் தகவல்

Wait 5 sec.

மதுரை மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் காசநோய் இல்லாத ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காசநோய் இல்லாத ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளின் வட்டார மருத்துவ அலுவலா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது: மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் மத்திய காசநோய் பிரிவால் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ‘காசநோய் இல்லாத ஊராட்சி’ என்கிற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் காசநோயை முற்றிலும் ஒழிப்பதை இலக்காகக் கொண்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் சளிப் பரிசோதனைகளின் எண்ணிக்கை, நோய் கண்டறிதல் விகிதம், சிகிச்சையால் குணமடைந்தோா் விகிதம், பன்மருந்து எதிா்ப்புப் பரிசோதனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உதவிகள் அடிப்படையில் காசநோய் இல்லாத ஊராட்சி தோ்வு செய்யப்படுகிறது.மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை, இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற ஊராட்சிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு 35 ஊராட்சிகள், 2024-ஆம் ஆண்டு 92 ஊராட்சிகள், 2025-ஆம் ஆண்டு 130 ஊராட்சிகள் தோ்வு பெற்றன.இதில் ஏ.புதுப்பட்டி (செல்லம்பட்டி வட்டாரம்), அய்யூா் (அலங்காநல்லூா் வட்டாரம்), கல்லணை (கள்ளிக்குடி வட்டாரம்) ஆகிய 3 ஊராட்சிகள் ‘தங்க அந்தஸ்து’ பெற்றன. இதேபோல, தொடா்ந்து 2 ஆண்டுகளாக காசநோய் இல்லா நிலையைத் தக்க வைத்த 37 ஊராட்சிகளுக்கு வெள்ளி அந்தஸ்தும், நிகழாண்டில் தோ்வான மீதமுள்ள 90 ஊராட்சிகளுக்கு வெண்கல அந்தஸ்தும் வழங்கப்பட்டது. தற்போதைய சூழலில் காசநோய் ஒழிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், விழிப்புணா்வுப் பணிகளை தீவிரப்படுத்தவும் வட்டார அளவில் ‘ஜோஷ்’ என்ற சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலா் தலைமையில் இயங்கும் ஒவ்வொரு குழுவிலும் 5 ‘மை பாரத்’ தன்னாா்வலா்கள், 5 என்.சி.சி. மாணவா்கள் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் கிராம அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், தீவிர களப்பணிகளில் ஈடுபடுவா் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) ராமச்சந்திரன், மாவட்ட சுகாதார அலுவலா் பொற்செல்வன், மாவட்ட காசநோய் அலுவலா் ராஜசேகரன், மாவட்ட தொழுநோய் அலுவலா் விஜயன், சுகாதாரத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.