தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு அவருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது. தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த தென் ஆப்பிரிக்க சட்ட நிபுணா் நவநீதம் பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த தென்னாப்பிரிக்க நீதிபதி மற்றும் மனித உரிமை ஆா்வலரான அவருக்கு, வழக்குரைஞரும் தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவருமான முனைவா் ஜி.சிவபாலமுருகன் தனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.சங்கத்தின் பொதுச் செயலாளா் சத்யா அசோகன் தனது வாழ்த்துச் செய்தியில், ‘தென்னாப்பிரிக்க தமிழரான நவநீதம் பிள்ளை மனித சமுதாயம் நலமுடன் வாழ, உலகெங்கும் அமைதியைப் பரப்பும் நோக்கில் செயல்பட்டதற்காக, மிக உயரிய விருதான நோபல் பரிசை ஒரு தமிழ்ப் பெண்மணி அமைதிக்காக வென்றிருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா். அத்துடன், துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன், இணைச் செயலாளா்கள் ராஜ்குமாா் பாலா, ஜோதிபெருமாள், பொருளாளா் பாலமூா்த்தி, இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.