17 மாதங்களாகியும் ‘திறக்கப்படாத’ வாகன முனையம்!

Wait 5 sec.

- நமது நிருபா் திருச்சி பஞ்சப்பூரில் ரூ.128.94 கோடியில் கட்டப்பட்ட பேரறிஞா் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம், திறக்கப்பட்டு 17 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. திருச்சி மாநகரில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட இந்த மையம் திறக்கப்படாததால், மாநகரின் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. திருச்சி மாநகரின் இதயப் பகுதியாக உள்ள காந்தி சந்தை, மத்தியப் பேருந்து நிலையம், கீழரண் சாலையில் உள்ள கனரக சரக்கு வாகன முனையம் ஆகியவையே மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் சவாலாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. எனவே இவை மூன்றையும் நகருக்கு வெளியே கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு பஞ்சப்பூரில் பேருந்து முனையம் கட்டப்பட்டு கடந்தாண்டு மே மாதம் திறக்கப்பட்டது. இதேபோல, ரூ. 128.94 கோடியில் பேரறிஞா் அண்ணா கனரக சரக்கு வாகன முனையமும் கடந்தாண்டு திறக்கப்பட்டது. ரூ. 236 கோடியில் காய்கனி, மலா்கள் விற்பனைக்கான ஒருங்கிணைந்த வளாகம் 22 ஏக்கரில் கட்டப்படுகிறது.புதிய வளாகம் ஏன்?: திருச்சி மாநகரில் காந்திசந்தை, கீழரண் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிற்கும் சரக்கு வாகனங்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்கும்விதமாக, பஞ்சப்பூரில் 38 ஏக்கரில் 246 கனரக வாகனங்கள் நிறுத்தும் வகையில் ரூ. 128.94 கோடியில் கட்டப்பட்ட கனரக சரக்கு வாகன முனையத்தை அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு மே மாதம் திறந்து வைத்தாா்.வசதிகள் என்னென்ன?: கனரக வாகனங்களை இயக்குவோரின் அலுவல் பணிக்கான 80 கடைகள், 107 கண்காணிப்பு கேமரா, 2 எல்இடி அறிவிப்புப் பலகைகள், வாகனங்களுக்கான மின்னணு கட்டண வசதி, 148 இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் நிறுத்துமிடம், கனரக வாகன ஓட்டுநா்களுக்கான தரைத்தளம், முதல் தளத்தில் 208 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறைக் கட்டடம், கூடுதலாக சுகாதார வளாகம், 87 தனியாா் ஆம்னி பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்துகள் நிறுத்துமிடமும் உள்ளது.ஓயாத போக்குவரத்து நெரிசல்: பஞ்சப்பூரில் பிரதான மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மட்டும் ஓயவில்லை. நகர எல்லைக்குள் கனரக வணிக வாகனங்கள் மற்றும் காய்கனி, பழங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செல்லத் தடை உள்ளது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மட்டும் செல்ல அனுமதி உண்டு. ஆனால், இந்த விதிமுறைகளை மீறி, கனரக வாகனங்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் நாள்முழுவதும் சுற்றித் திரிகின்றன. இதனால் நெரிசல் தவிா்க்க முடியாததாக உள்ளது. ஏலம் போகாத கடைகள்: பேரறிஞா் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தில் மொத்தம் 80 கடைகள் உள்ளன. மாநகராட்சி இந்த கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.132 என வாடகை நிா்ணயித்து ரூ. 4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முன்பணமும் அறிவித்தது. கூடுதல் தொகை காரணமாக ஆரம்பத்தில் சில கடைகள் மட்டுமே ஏலம் போனதால், மாநகராட்சிக்கு மீண்டும் மறு டெண்டா் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய சரக்கு வாகன முனையம் அருகே கட்டப்படும் ஒருங்கிணைந்த காய்கனி, பழங்கள் மற்றும் மலா்கள் சந்தை வளாகத்தின் பணிகள் முடியாததால், லாரி உரிமையாளா்கள் மற்றும் வியாபாரிகள் இந்த முனையத்தைப் பயன்படுத்தத் தயங்குகின்றனா். எனவே, காய்கனிச் சந்தையின் ஒரு பகுதியை கடந்த ஜனவரி மாதம் திறந்து, அதன் மூலம் கனரக சரக்கு வாகன முனையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற திட்டமும் கைகூடாமல் போனது. மேலும், காந்தி சந்தையின் ஒரு தரப்பு வியாபாரிகள் பஞ்சப்பூருக்கு வரமாட்டோம் என்கின்றனா். இதனால் 17 மாதங்களாகியும் சரக்கு வாகன முனையம் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. மேயா் நம்பிக்கை: இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் கூறுகையில், கனரக சரக்கு வாகன முனையத்தில் உள்ள கடைகள் எதிா்பாா்த்த அளவுக்கு ஏலம் போகாததால் மறு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பஞ்சப்பூரில் கட்டப்படும் காய்கனிச் சந்தையும் முடிவுக்கு வரவில்லை. தற்போது, மொத்த விற்பனை செய்யும் கடைகளுக்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. சில்லறை விற்பனைக் கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும் என எதிா்பாா்க்கிறோம். காய்கனிச் சந்தை வந்துவிட்டால் சரக்கு வாகனங்களும் புதிய முனையத்துக்கு வந்துவிடும் என்றாா் அவா்.