அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மாகாத்மியம் ஆகிய புராணக் கூற்றுக்களின்படி மகிஷாசூரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாள்களாக 9 நாள்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி விழாவாகக் கொண்டாடுவது இக்கோயிலின் மரபு.அதன்படி நவராத்திரி திருவிழா வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபம் அருகே பல அடுக்குகள் கொண்ட நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் துர்க்கையின் 9 வடிவங்கள், பறவைகள், விலங்கினங்கள், மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான திருமணங்கள், விவேகானந்தர், வள்ளலார், பார்வதி, சரஸ்வதி, லட்சுமிதேவி, அஷ்டலட்சுமி, திருப்பதி ஏழுமலையான், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், குபேரன் மற்றும் தேவதேவியர் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் கொலுவில் இடம் பெற உள்ளது.11-ந் தேதி இரவு: அம்மன் குமாரிகா (துர்க்கை) அலங்காரத்திலும், 12-ந் தேதி திருமூர்த்தி அலங்காரத்திலும், 13-ந் தேதி கல்யாணி அலங்காரத்திலும் எழுந்தருளுகிறாள். 14-ந் தேதி ரோகினி அலங்காரத்திலும், 15-ந் தேதி காளிகா அலங்காரத்திலும், 16-ந் தேதி: சண்டிகா அலங்காரமும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறாள். 17-ந் தேதி சாம்பவி அலங்காரத்திலும், 18-ந் தேதி துர்கா அலங்காரத்திலும், 19-ந் தேதி சுபத்ரா அலங்காரத்திலும், (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார். 20-ந் தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறது. அதைத் தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொருநாளும் இரவில் உள்பிரகாரத்தில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் அம்மன் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.ஆதிமாரியம்மன் கோயிலில்...இதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா வருகிற 11-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 20-ந் தேதி அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ஆதிமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.