தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தில்லி காவல் துறை தடியடி நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் இன்று (அக். 7) போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், காவல் துறையினர் மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், எம்பிக்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தில்லி காவல் துறையினர் கொடூரமான முறையில் தடியடி தாக்குதல் நடத்தியதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி, அவர் கூறுகையில்,“எங்கள் மீது அவர்கள் கொடூரமான முறையில் தடியடி தாக்குதல் நடத்தினர். இதற்கு ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்தான் பொறுப்பாவார்கள். இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் பார்த்ததில்லை. இது கொடூரத்தின் உச்சம். உங்களின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. நீங்கள் அனைவரும் கோழைகள்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரைக் காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.ஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!police resorted to a lathi-charge against INDIA bloc MPs who were protesting to demand the resignation of CEC Gyanesh Kumar.