இப்போது சென்னையில் இல்லாவிட்டாலும் தில்லி போன்ற நகரங்களில் வாழ்பவர்கள் ஏற்கனவே வாங்கி வீட்டில் பயன்படுத்தி வரும் ஒரு பொருள். விரைவில் பிற பகுதிகளிலும் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.அதுதான் காற்று சுத்திகரிப்பான் எனப்படும் ஏர் பியூரிஃபையர். வழக்கமாக சென்னை போன்ற பகுதிகளில் இதன் தேவை அத்தியாவசியப் பட்டியலில் இல்லாவிட்டாலும், முக்கிய சாலைக்கு அருகே வாழ்பவர்கள், கட்டட வேலைகள் நடக்கும் இடத்துக்கு அருகே அல்லது தொழிற்சாலை அதிகம்கொண்ட பகுதிகளில் வாழ்பவர்கள் போன்றோர் வீட்டில் இதனை நிச்சயம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.சரி, இதில் என்ன மாயாஜாலம் இருக்கிறது என்று கேட்டால், ஒரு அறையில் காற்று சுத்திகரிப்பான் வைக்க வேண்டும் என்றால் அது குறித்து பல்வேறு விவரங்கள் நாம் அலசி ஆராய வேண்டும்.ஒரு அறையின் அளவுக்கு ஏற்ப, அந்த காற்று சுத்திகரிப்பானின் திறன் அமைய வேண்டும். ஒரு அறையின் அளவு, சப்தம், இயங்கும் நேரம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஒவ்வொரு காற்று சுத்திகரிப்பானும் இரவு முழுவதும் இயங்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது இயங்க வேண்டியது இருக்கும்.காற்று சுத்திகரிப்பானில் உள்ள வடிகட்டி எந்த வகையானது என்பதையும் அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாமா? புதிய வடிகட்டிகளை வாங்க வேண்டும் என்றால் அதன் விலை என்ன என்பதையும் ஆராய வேண்டியது உள்ளது.சில காற்று சுத்திகரிப்பான்களில் கூடுதலாக சில அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். அவை வாங்குபவர்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்று பார்த்து வாங்கினால் பயனளிக்கும்.