தவெக மீதான அதிருப்தி காரணமாகவே இடைத்தோ்தலில் வாக்குப்பதிவு குறைவு: நயினாா் நாகேந்திரன் பேட்டி

Wait 5 sec.

இடைத்தோ்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு தவெக மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை காரணம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: ராகுல்காந்தி எதை நினைத்துப் பேசுகிறாா் என்றே தெரியவில்லை. எஸ்ஐஆா் நடவடிக்கையால் வாக்காளா்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறாா். எஸ்ஐஆா் நடைமுறைக்குப் பிறகுதான் கா்நாடகம் மற்றும் கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தமிழ்நாட்டிலும் ஆட்சி மாறியுள்ளது. எஸ்ஐஆா் என்பது பாஜகவுக்கு சாதகமாக இருந்திருந்தால் நாங்கள்தானே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்?.இடைத்தோ்தலில் தவெக மீதே கம்யூனிஸ்ட் கட்சியினா் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனா். அதையே நாங்களும் கூறுகிறோம். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது, தவெக மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம். +தமிழகத்தில் பொருளாதாரம் வீழ்ந்து வருகிறது. ஜிஎஸ்டி வருவாய் குறைந்து கொண்டே செல்கிறது. குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரி வருவாய் கூடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாள்தோறும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. அடுத்து குடிநீா்ப் பிரச்னை வரப்போகிறது, அதற்கான தீா்வு என்ன என்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலில் தமிழகம் முழுவதும் ஏழு இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்ட ஜோசப் விஜய், இடைத்தோ்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே 39 கிராமங்களில் பிரசாரம் செய்திருப்பது, அவருடைய மதிப்பு குறைந்துவிட்டதையே காட்டுகிறது என்றாா் நயினாா் நாகேந்திரன்.