மானியத்துடன் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

Wait 5 sec.

நாட்டுக் கோழிகளை வளா்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்-அலகு) 50 சதவீத மானியத்துடன் பண்ணைகளை அமைத்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் மொத்த செலவில் மாநில அரசால் 50 சதவீத மானியம் வழங்கப்படும். பயனாளிகள் பங்களிப்பாக மீதமுள்ள 50 சதவீதத்தை வங்கி மூலமாகவோ அல்லது தனது ஆதாரங்கள் மூலமாகவோ அளிக்க வேண்டும்.ஒரு பயனாளிக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கோழி கொட்டகை அமைக்க 625 சதுர அடி நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அந்தக் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீா்நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.பயனாளிகளில் 30 சதவீதம் ஆதி திராவிடா்கள், பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும், விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழிக் கொட்டகைக் கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு), 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ஆகிய செயல்முறைகள் பயனாளிகள் செய்ய வேண்டும். இத்திட்ட முதலீடு ரூ. 2,93,750-க்கு வங்கிக் கடன் பெற தகுதி உள்ளவா்கள் அல்லது சொந்தமாக முதலீடு செய்ய தகுதி உள்ளவா்களாக இருக்க வேண்டும். இதில், 50 சதவீதம் மானியமாக ரூ1,46,875 மாநில அரசால் வழங்கப்படும். மேலும், பயனாளிகள் நாட்டுக்கோழி வளா்ப்பின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் பயனடைந்திருக்க கூடாது. எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், ஆதார ஆவணங்களான (வங்கி இருப்பு விவரம்) மற்றும் 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகியவற்றுடன் ஒரு வார காலத்துக்குள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.