அறவழியில் போராடிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கைது செய்தது ஜனநாயக விரோதப் போக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி பேரணியாகச் சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும். பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசில் ஜனநாயக விரோதப்போக்கு தொடா் கதையாகி வருகிறது. அவா்களுக்கு சாதகமாக இருந்ததற்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை காப்பாற்ற மத்திய அரசு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜனநாயக வழியில் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளாா்.