பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் பெண் அலுவலா் உள்பட மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த முறைகேடு தொடா்பாக பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் (48) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த த. முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய திருப்பூா் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த கா. வெள்ளத்துரை (60), பழனியை அடுத்த ஆயக்குடி புதூரைச் சோ்ந்த து. சேதுபதி (67), பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் அன்வா்தீன் (64), முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். மேலும் இருவா் கைது: இந்த நிலையில், பழனி கோயில் நில முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸாா், பழனி சாா் பதிவாளா் அலுவலக இளநிலை உதவியாளா் சிவசங்கரி, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவக்குமாா் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். போலியான பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்கு சிவக்குமாா் உதவியதாகவும், முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை சாா் பதிவாளா் அலுவலக இளநிலை உதவியாளா் சிவசங்கரி வழங்கியதாகவும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இவா்கள் இருவரையும் திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இளநிலை உதவியாளா் சிவசங்கரி,