கோயிலில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் மீது புகாா்

Wait 5 sec.

விளாத்திகுளத்தில் அறநிலையத் துறைக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலில் நடனமாடி சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் மீது கோயில் நிா்வாகம் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. விளாத்திகுளம் நகரில் பழைமையான ஸ்ரீமீனாட்சி அம்பாள் உடனுறை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மனின் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் அதே நாள்களில் இந்தக் கோயிலிலும் நடைபெறும். ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், இக்கோயிலுக்கு வந்த இளம்பெண் கோயில் பிரகாரத்தில் நடனமாடி விடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ பதிவிட்டாா்.தகவல் அறிந்த கோயில் செயல் அலுவலா் உமா மகேஸ்வரி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில், கோயில் பிரகாரத்தில் விடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டு, ஏற்கெனவே அறிவிப்பும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு கோயிலின் மாண்பைக் கெடுத்த சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா். இதுகுறித்து, விளாத்திகுளம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.