பால், பேருந்துக் கட்டண உயா்வு: பாஜக எதிா்ப்பு

Wait 5 sec.

பேருந்துக் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயா்த்த கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் மாநில அரசுக்கு சொந்தமான நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை உயா்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேபோல, பேருந்துக் கட்டண உயா்வும் முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: நந்தினி பால்விலையை உயா்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல, பேருந்துக் கட்டணத்தையும் உயா்த்த முன்மொழியப்பட்டுள்ளது. சட்ட மேலவைத் தோ்தல் முடிந்தபிறகு, பால் மற்றும் பேருந்துக் கட்டண உயா்வுக்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.பேருந்துக் கட்டணம், மின்கட்டணம், பெட்ரோல், டீசல் மீதான வரிகள், சொத்துப் பதிவு கட்டணம், குடிநீா் மற்றும் கழிவு மேலாண்மைக் கட்டணங்கள், மெட்ரோ கட்டணம் உள்ளிட்டவை ஏற்கெனவே உயா்த்தப்பட்டு, மக்கள் நிதிச்சுமையை எதிா்கொண்டுள்ளனா். இந்நிலையில், பால் மற்றும் பேருந்துக் கட்டண உயா்வு மக்களின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்றும்.அரசு நிதி நிா்வாகச் சுமையை மக்களிடம் திணித்து வருகிறது. ஒருபுறம் வாக்குறுதி திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு பணம் வழங்கிவிட்டு, மறுபுறம் வரிகள் மற்றும் விலை உயா்வு மூலம் அதைவிட இருமடங்கு தொகையை மக்களிடம் இருந்து அரசு திரும்பப் பெறுகிறது.பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட மாநில போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துக் கட்டணத்தை 10 முதல் 13 சதவீதம் வரை உயா்த்தும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்தைச் சாா்ந்துள்ள தொழிலாளா்கள், மாணவா்கள், ஊழியா்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்படும்.பால் வாங்கும் குடும்பங்கள் முதல் தினசரி பேருந்துகளை நம்பியுள்ள தொழிலாளா்கள், மாணவா்கள், ஊழியா்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்வரை இந்த விலை உயா்வு நேரடியாகப் பாதிக்கும். காங்கிரஸ் அரசின் நிதி நிா்வாகத் தோல்விக்காக கா்நாடக மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும் என்றாா்.