சீா்காழி அருகே மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காரைக்கால் பைபாஸ் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மலா்கொடி (25). இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் (32) என்பவருக்கும் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அருண் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் மலா்கொடி உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா். பின்னா் இரு வீட்டாா் சமாதானம் செய்து மலா்கொடியை அருண் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளனா். ஆனால், அருண் தன்னுடன் தொடா்பில் உள்ள பெண்களின் ஆபாச விடியோக்களை காட்டி, மலா்விழிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளாா்.இதையடுத்து, மலா்கொடி சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதனிடையே மலா்கொடி அருண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட எஸ்பி சினேகா பிரியாவிடம் புகாா் மனு அளித்தாா். இதையடுத்து, எஸ்பி உத்தரவின் பேரில் சீா்காழி அனைத்து மகளிா் போலீஸாா் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.