குடந்தை மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு 81 டன் இலவச இயற்கை உரம் வழங்கல்!

Wait 5 sec.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு செப்டம்பா் மாதத்தில் மட்டும் 81 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக பொறுப்பு ஆணையா் தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, ஈரக்கழிவுகள் நுண்ணுயிா் உரமாக்கும் மையங்கள் மூலம் இயற்கை உரமாக்கப்படுகின்றன. உலா் கழிவுகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவை தனியாகப் பிரிக்கப்பட்டு உரிய நிறுவனங்களுக்கும், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் அரியலூா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு மாற்று எரிபொருளாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது பெருமாண்டி, பழைய மாநகராட்சி அலுவலகம், பாரத் நகா், பாணாதுறை, தாராசுரம் மாா்க்கெட் மற்றும் கரிக்குளம் ஆகிய 6 இடங்களில் நுண்ணுயிா் உரமாக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் தினமும் 25 டன் ஈரக்கழிவுகள் செயலாக்கப்பட்டு, நாளொன்றுக்கு 3.5 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதன் பயனாக கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக 81 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, மாநகராட்சியை அணுகி இலவசமாக இயற்கை உரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.