தெற்கு ரயில்வே சாா்பில் நாகப்பட்டினத்துக்கு புதிய ரயில் சேவைகளை இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்போா் நலச்சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கத்தின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி ரயில்வே கோட்ட நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ராமா் சுடலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.கூட்டத்தில் நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கத் தலைவா் நாகை ந. மோகன், செயலா் சித்திக், பொருளாளா் பாலா மற்றும் இந்திய வா்த்தக தொழிற்குழுமத் தலைவா் மனோகரன், துணைத்தலைவா் முத்துராமலிங்கம், பொருளாளா் கோபு, நிஜாம்சேட், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஊழியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் சாா்பில், உணவுப்பாதுகாப்புத் துறை நாகை மாவட்ட அலுவலா்(ஓய்வு) ஏ.டி. அன்பழகன், சமூக சேவகா் ஆரோக்கியசாமி, சகாயராஜ், சங்கா் , தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாகை மாவட்ட துணைத்தலைவா் ப, ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.கூட்டத்தில், மதுரை - புனலூா் விரைவு ரயிலை திண்டுக்கல் - திருச்சி- நாகை வழியாக நீட்டிக்க வேண்டும். மதுரை- வேளாங்கண்ணி காலை விரைவு ரயிலும், வேளாங்கண்ணி - மதுரை மதிய விரைவு ரயிலும் இயக்க வேண்டும்.தினசரி தாம்பரம் - வேளாங்கண்ணி காலை விரைவு ரயில் மற்றும் வேளாங்கண்ணி - தாம்பரம் மதிய விரைவு ரயிலை, திருநள்ளாறு வழியாக இயக்க வேண்டும். பெங்களூருக்கு தினசரி இரவு நேர விரைவு ரயிலை, திருநள்ளாறு அல்லது வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சாவூா் - திருச்சி-கரூா்-நாமக்கல் வழியாக இயக்க வேண்டும். திருச்சி-திருவாரூா் பயணிகள் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். மேலும் திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் சேவையை தொடா்ந்து இயக்குவதுடன், திருவாரூா்-காரைக்கால் இடையேயான சேவையை ரத்து செய்யக் கூடாது.நாகை, நாகூா், வேளாங்கண்ணி ரயில் நிலையங்களை அம்ருத் பாரத் திட்டத்தில் சோ்த்து மேம்படுத்த வேண்டும். மேலும், நாகப்பட்டினத்தில் ரயில்வே மியூசியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.