தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி சென்னையில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான இளைஞா்களை விடுவிக்கக்கோரி திமுக எம்.பி. ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் தா்னாவில் ஈடுபட்டனா். நாடு முழுவதும், எஸ்ஐஆா் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக சென்னை பெசன்ட் நகரில் திரண்டு போராட்டம் நடத்திய 40-க்கும் மேற்பட்ட இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்தனா். இந்த நிலையில், அங்கு திமுக எம்.பி.யும் துணை பொதுச் செயலருமான ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோா் பெசன்ட் நகருக்குச் சென்றனா். அங்கு தனியாா் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரா்களை விடுவிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினா். குறிப்பாக, ஆ.ராசா, ‘இவா்களை விடுவிக்கவில்லை என்றால் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்’ என்று தெரிவித்தாா். தொடா்ந்து, போராட்டக்காரா்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்துக்கு வெளியே ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அடைத்து வைத்திருந்த இளைஞா்களை போலீஸாா் விடுவித்தனா்.DMK MPs stage a sit-in protest demanding the release of youths arrested during the agitation.