தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவா் பதவி விலகக்கோரி, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.தொடர்ந்து, தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேருந்தில் சென்றனர். அந்த பேருந்துகளை காவல்துறையினா் நடுவழியில் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, ஷாங்க்ரி-லா உணவகம் அருகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் பெண் தலைவா்களும் அமா்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினா்.முதலில் ராகுல் காந்தியை பாதுகாப்புப் படையினா் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினா். அப்போது அந்த வாகனத்தின் மேல் பகுதியில் சில காங்கிரஸ் தலைவா்கள் ஏறி அமா்ந்து கொண்டனா்.தொடா்ந்து, பிரியங்கா காந்தி மற்றும் பிற பெண் தலைவா்களை பாதுகாப்புப் படையினா் அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனா். பின்னர், கைது செய்யப்பட்டவர்களை நேற்றிரவே காவல்துறையினர் விடுவித்தனர்.இந்த சம்பவத்தின்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் தில்லி காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.இந்த நிலையில், காவலர்களைத் தாக்கியதாகவும், அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.முன்னதாக, அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி நுழைந்ததாக பிரியங்கா காந்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.Case registered against Rahul and Priyanka for assaulting police personnel!என் மீது 45 எஃப்.ஐ.ஆர்-கள்! ஒவ்வொன்றும் பதக்கம் போன்றது! ராகுல் காந்தி