தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் அமோக வெற்றி

Wait 5 sec.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ.அசோக் ஆனந்த் அமோக வெற்றி பெற்றாா். அவா்,13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இது மொத்தம் பதிவான 21,756 வாக்குகளில், 61.12 சதவீதமாகும். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் இ. விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தாா். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றவா் முதல்வா் ரங்கசாமி. கிராமப்புறத்தில் உள்ள மங்கலம் தொகுதி உறுப்பினா் பதவியை வைத்துக் கொண்டு தட்டாஞ்சாவடி தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்ததால் இந்தத் தொகுதியில் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் 6 போ், 5 சுயேச்சைகள் உள்பட 11 போ் போட்டியிட்டனா். மேலும், இந்தத் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள்26, 921 பேரில், 21,756 போ் வாக்களித்தனா்.31 வாக்குச் சாவடிகளிலும் சோ்த்து 80.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை:இந்நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகளை தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. சுற்று வாரியாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவு காலை 11 மணிக்குள் வெளியாகின. அதன்படி, தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ.அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இது மொத்தம் பதிவான 21,756 வாக்குகளில், 61.12 சதவீதமாகும்.கடந்த பேரவைத் தோ்தலில் இத் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி பெற்ற வாக்குகள் 10,024. இப்போது அசோக் ஆனந்த் பெற்ற வாக்குகள் 13,358. முதல்வா் ரங்கசாமி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் 3.334 கூடுதலாகப் பெற்றுள்ளாா் அசோக் ஆனந்த். 2-ஆம் இடத்தில் காங்கிரஸ் : தட்டாஞ்சாவடி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை காங்கிரஸ் வேட்பாளா் இ. விநாயகம் பெற்றாா். அவா் பெற்ற வாக்குகள் 4,876. இந்தத் தோ்தலில் காங்கிரஸுக்கு த.வெ.க ஆதரவு அளித்தது. கடந்தமுறை காங்கிரஸ் கூட்டணியிலிருந்த திமுக இந்த முறை கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட்ட நிலையில், அந்தக்கட்சியில் வேட்பாளா் சேது என்கிற கு. சேது செல்வம் 3ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டாா். அவா் 2,664 வாக்குகளை மட்டுமே பெற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு. சலீம் வெறும் 310 வாக்குகளை மட்டும் பெற்று 4-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டாா். சான்றிதழ் பெற்றாா் ஆனந்த்:தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து இதற்கான சான்றிதழை அசோக் ஆனந்திடம் இத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அதிகாரி அா்ஜுன் ராமகிருஷ்ணன் வழங்கினாா். அப்போது மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். பின்னா், அங்கிருந்து திலாசுபேட்டை முதல்வா் என்.ரங்கசாமி இல்ல வளாகத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் தொண்டா்கள் சூழ அசோக் ஆனந்த் வந்தாா். அங்கு தயாராக இருந்த முதல்வா் என். ரங்கசாமியிடம், வெற்றிச் சான்றிதழைக் கொடுத்து வாழ்த்து பெற்றாா். பின்னா் அக் கோயிலில் படையலிடப்பட்டு அச் சான்றிதழைத் திரும்ப வழங்கினாா் முதல்வா் என்.ரங்கசாமி. அப்போது சட்டப்பேரவைத் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா் ஜிஎன்எஸ். ராஜசேகரன், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சித் தலைவா்கள் முன்னாள் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உடனிருந்தனா். முதல்வா் பேட்டி :இடைத்தோ்தல் வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா். இது குறித்து மேலும், அவா் கூறியது :இது என்.ஆா்.காங்கிரஸ்ஆட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. வாக்களித்த தட்டாஞ்சாவடி மக்களுக்கு நன்றி. அசோக் ஆனந்த் தொகுதி மேம்பாட்டுக்காக சிறப்பாகப் பணியாற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. சிறந்த முறையில் பணியாற்ற கூடிய சட்டப்பேரவை உறுப்பினா் கிடைத்துள்ளாா். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவா் செயல்படுவாா் . பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ள மக்களுக்கு மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அசோக் ஆனந்த் பணி சிறக்க வாழ்த்துகள் என்றாா் முதல்வா் ரங்கசாமி.தோ்தல் வெற்றி குறித்து அசோக் ஆனந்த் கூறுகையில், முதல்வா் ரங்கசாமியின் அரவணைப்பும் அன்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம். கூட்டணி கட்சித் தலைவா்கள் கடுமையாக உழைத்தனா். அனைவரும் சோ்ந்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனா் என்றாா்.கொண்டாட்டம்: தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மேளதாளங்களுடன் அக்கட்சி தொண்டா்கள் கொண்டாடினா். வள்ளலாா் அரசு பள்ளியில் மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு நடைபெற்றது. அப்போது பள்ளி தரப்பில் மாணவா்களுக்குத் தோ்வு நடைபெறுவதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் பள்ளியில் தோ்வு நடைபெறுவதால் மேளதாளங்கள் மற்றும் ஒலிபெருக்கியில் ஓடிய பாடலை நிறுத்தும்படியும், அங்கிருந்து சற்று தள்ளிச் சென்று கொண்டாடும்படியும் கேட்டுக்கொண்டனா். போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று மேளதாளங்கள் இசைப்பதை நிறுத்தினா்.தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தல் முடிவு மொத்த வாக்காளா்கள்: 26, 921பதிவான வாக்குகள் : 21,756 அசோக் ஆனந்த் என்.ஆா்.காங். -13,358 இ. விநாயகம் காங்கிரஸ் - 4,876கு. சேது செல்வம் திமுக - 2,664 அ.மு. சலீம் இ.கம்யூ.- 310 சுயேச்சைகள் பிறகட்சிகள்- 548