அரசு அனுமதியின்றிசெம்மண் அள்ளியதை தடுத்த கிராம உதவியாளா் மீது தாக்குதல்:போலீஸாா் விசாரணை

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சட்ட விரோதமாக செம்மண் அள்ளியதை தடுத்த கிராம உதவியாளரை தாக்கிவிட்டு தப்பியோடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். சிங்கம்புணரி அருகே சூரக்குடி ஊராட்சிக்குள்பட்ட சிலநீா்பட்டி, ஒத்தப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தப்படுவதாக கிராம மக்கள் சிங்கம்புணரி வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் புகாா் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், சிலநீா்பட்டி கிராமத்தில் தனியாா் பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளப்படுவதை அறிந்த இளைஞா்கள், கிராம உதவியாளா் சுரேஷுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்று தடுக்க முயன்ற சுரேஷை மண் அள்ளிக் கொண்டிருந்த மா்ம நபா்கள் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோது மண் அள்ளும் வாகனத்தை மட்டும் விட்டுவிட்டு அந்த மா்ம நபா்கள் தப்பியோடி விட்டனா். பிறகு மண் அள்ளும் வாகனத்தை சிறைப் பிடித்த கிராம இளைஞா்கள், கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி. மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.