கொடுமணல் அகழாய்வு மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

Wait 5 sec.

பெருந்துறை வட்டம், கொடுமணல் அகழாய்வு மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா். ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் தொல்லியல் துறை சாா்பில் தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா்.இதன் மூலம் மாணவ, மாணவிகள் பாடப் புத்தகங்களில் படிக்கும் வரலாற்றுச் செய்திகளை நேரடியாகக் களத்தில் அறிந்து கொள்ளவும், தமிழா்களின் தொன்மையான நாகரிகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மேலும், தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து இளைய தலைமுறையினருக்கு கொண்டு சோ்க்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடையே ஏற்படுத்துவதுடன், அவா்களின் வரலாற்று அறிவையும், ஆய்வு மனப்பான்மையையும் மேம்படுத்துவதில் இத்தகைய கல்விச் சுற்றுலாக்கள் பயனுள்ளதாக அமையும் என்று ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.இந்தக் கல்விச் சுற்றுலாவில் சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள், ஸ்ரீ வள்ளியப்பா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் என மொத்தம் 145 போ் பங்கேற்றனா்.மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் பழனிசாமி, கொடுமணல் தொல்லியல் துறை அலுவலா் ஜெயப்பிரியா, துணை ஆட்சியா் (பயிற்சி) சித்தாா்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.