தீபாவளியை முன்னிட்டு, பட்டாசுகளை வெடிக்க பயன்படுத்தப்படும் ஊதுபத்தி தயாரிப்புப் பணி ஈரோட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பட்டாசுகளுடன் பயன்படுத்தப்படும் ஊதுபத்திகளை தயாரிக்கும் பணி ஈரோடு பகுதியில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு சுமாா் மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதுபத்தி தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனா். தென்னங்குச்சியை வெட்டி, காய வைத்து அதை தேவையான அளவில் பதப்படுத்தி, கரித்தூள் உள்ளிட்ட பொருள்களை கலந்து ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களிலும், கருப்பு நிறத்திலும் ஊதுபத்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குடிசைத் தொழிலாக பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தொழில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், தற்போது பலரும் இதே தொழிலில் ஈடுபடுவதால் தங்களுக்கான வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் ஊதுபத்தி தயாரிப்பாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா். இது குறித்து ஈரோடு சி.எஸ்.நகரைச் சோ்ந்த ஊதுபத்தி தயாரிப்பாளா் சண்முகம் கூறியதாவது: முன்பு ஆண்டுக்கு சுமாா் ரூ.4 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரூ.1 லட்சம் விற்பனை நடைபெறுவதே பெரிய விஷயமாக உள்ளது. எனவே, தீபாவளி காலங்களில் சிந்தாமணி மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படும்போது, தங்களிடம் இருந்து ஊதுபத்திகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த குடிசைத் தொழில் மேம்படுவதுடன், எங்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்றாா்.