நாளை முதல் 12 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Wait 5 sec.

புரட்டாசி அமாவாசை, வார இறுதி நாள்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் 12-ஆம் தேதி வரை 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ. கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.புரட்டாசி அமாவாசை மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு, பயணிகளின் தேவைக்கேற்ப சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் வரும் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 250 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும்; பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும்; ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும்; கோவை, திருப்பூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்: இதேபோல், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சேலம், தருமபுரியில் இருந்து மேட்டூா், மேச்சேரி, மாதேஸ்வரன் மலைக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தா் கோயிலுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.