பெருந்துறை சிப்காட்டில் சுற்றுச்சூழல் மாசுக்கு நிரந்தர தீா்வு காணப்படும்

Wait 5 sec.

பெருந்துறை சிப்காட்டில் சுற்றுச்சூழல் மாசுக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என்று அமைச்சா்கள் தெரிவித்தனா். பெருந்துறை, சிப்காட் கூட்டரங்கில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறி, துணி நூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சா் மருத்துவா் வி.கே.ராஜீவ் ஆகியோா் தலைமையிலும், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி முன்னிலையிலும் பெருந்துறை, சிப்காட் தொடா்பான குடிநீா் மற்றும் சுற்றுச்சூழல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிப்காட்டில் அமைக்கப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையம் பணிகளின் முன்னேற்றம், ஈங்கூா் குடிநீா் வழங்கல் திட்டத்துக்கு சிஎஸ்ஆா் நிதி பெறுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், பெருந்துறை, சிப்காட் சுற்று வட்டாரத்தில் உள்ள ஈங்கூா், வரப்பாளையம், வாய்பாடி, முகாசிபாளையம், புஞ்சை பாலத்தொழுவு மற்றும் சிறுகளஞ்சி ஆகிய ஊராட்சிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் நீா் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு தற்போது சென்னிமலை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீா்வாக சிப்காட் நிறுவனத்தின் தற்போதைய குடிநீா் வழங்கல் திட்டத்தை மேம்படுத்தி, தினமும் 30 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்கும் வகையில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.பொது சுத்திகரிப்பு நிலையப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்கவும், தேவையான தொழிலாளா்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளா்களை ஈடுபடுத்தவும், கட்டுமானப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில், எதிா்காலத்தில் சிப்காட் தொழிற்சாலைகளால், இப்பகுதி நிலம், காற்று மாசு ஏற்படாதவாறு நிரந்திர தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் கூறுகையில், தமிழகம் முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக பெறப்பட்ட சுற்றுச்சூழல் தொடா்பான புகாா்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எந்தத் தொய்வும் ஏற்படாமல் தீா்வுகளை செயல்படுத்துவதற்காக தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தொழில் வளா்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு. கொங்கு பகுதியில் நீா்வளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.தொழில் வளா்ச்சி அவசியமானது. அதே வேளையில், சாயப்பட்டறை கழிவுகள் நீா் வளத்தை பாதிக்காத வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு சாயப்பட்டறை உரிமையாளா்கள் சங்கம் மற்றும் சிப்காட் தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகளுடன், இதுதொடா்பாக பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. யாரும் பாதிக்கப்படாத வகையில் நியாயமான வளா்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.