வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவும் பயிற்சி வகுப்புகள்

Wait 5 sec.

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில், மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் என்பது, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் இந்திய மாணவ, மாணவிகளுக்கு பெரும் கவலையாக மாறியிருக்கிறது.வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவிட்டு, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற நடத்தப்படும் எஃப்எம்ஜிஇ எனப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.ஆனால், இதில் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இந்த நிலையைப் போக்க, நாட்டில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகின்றன.இந்திய நோய்களை அறிதல், சிகிச்சை முறைகள், நோயாளிகளின் வகைபாடுகள், நோயைக் கண்டறிதல், அடையாளம் காணுதல், அதற்குரிய சிகிச்சையை தெரிவு செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கட்டமைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை உருவாக்கி தனியார் மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன.இந்த பயிற்சி வகுப்புகள் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்களைக் கொண்டதாக உள்ளது. இதனை முடிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் தேர்ச்சி விகிதம் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாம்.இதுவரை தேர்வெழுதுவோரில் வெற்றி பெறுவோர் விகிதம் ஒற்றை இலக்கத்தில்தான் அதாவது 9 சதவிகிதமாக இருந்துவந்துள்ளது. ஆனால், இந்த பயிற்சி வகுப்புகள் காரணமாக தற்போது 12 - 13 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.மீண்டும் மீண்டும் தேர்வெழுதுவோருக்கு இது பயனுள்ளதாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.