முனைவர் இராதா செல்லப்பன் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை (1891-1956) தமிழிலும் ஆங்கிலத்திலும் 23 நூல்களையும், 250 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 52 நூல்களை அவர் பதிப்பித்துள்ளார். இலக்கிய வரலாற்றுத் துறை, இலக்கியத் திறனாய்வு, ஒப்பியல் ஆய்வு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சி, நாட்டுப்புறவியல், பண்பாடு, மொழியாராய்ச்சி (மொழியியல்), மொழி வரலாறு, சுவடி-நூற்பதிப்பு (சுவடியியல்), அகராதித் தொகுப்பு (அகராதியியல்), வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர்.இவரது குறிப்பிடத்தக்க பணி தமிழ்ப் பேரகராதி. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியான இதைப் பத்தாண்டு காலத்தில் நிறைவு செய்து வெளிக்கொணர்ந்தார். இது 1,17,762 சொற்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கொண்டது.தமிழ்ப் பேரகராதிக்கு அவர் எழுதிய ஆங்கில முன்னுரையில் தமிழ் அகராதியின் வரலாற்றை முதல் நிகண்டான திவாகர நிகண்டிலிருந்து தொடங்கி, கால வரிசைப்படி விளக்குகிறார். அகராதித் துறையில் முதன் முதலில் வெளிவந்த கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது. இந்த முன்னுரைதான் இன்றைக்கும் அகராதியியல் அறிஞர்களுக்கு வழிகாட்டி நூலாக விளங்குகிறது எனலாம்.1936-இல் நிறைவுற்ற அந்தப் பேரகராதிக்குப் பிறகு, 90 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு பேரகராதி இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.இவரது தமிழ்ப் பேரகராதிப் பணியைப் பாராட்டி, 1938-இல் சென்னை அரசு இவருக்கு ராவ் சாகிப் பட்டத்தை அளித்து சிறப்பித்தது. சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே என்பதை முதன் முதலில் நிறுவி, 1940-இல் சமாஜப் பதிப்பாகச் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார். 43 ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப் பெற்ற பெருமையுடையது இப் பதிப்பு. சங்கப் புலவர்கள் பாடல்களை ஒருசேரத் துய்க்கும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு அகராதிகளைப் பிற்சேர்க்கையாகக் கொண்டது.சங்கப் பாடல்கள் பாடப்பெற்ற காலமும் அவை தொகுக்கப்பெற்ற காலமும் ஒன்றல்ல என்று முதலில் தெரிவித்தவர் இவரே. சங்க இலக்கியங்களுள் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவை பிற்பட்டவை என்ற இவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முச்சங்கங்கள் பற்றிய வரலாறு ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று என்ற பேராசிரியர் கருத்தை அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் (மு.வரதராசன். தமிழ் இலக்கிய வரலாறு பக்.29).களவியற்காரிகை என்ற இலக்கண நூலை முதன்முதலில் பதிப்பித்த பெருமையும் இவருக்குண்டு. இந்த நூலின் பெயர்தானும் அவர் சூட்டியது.பதிப்புகளை ஆராய்ச்சிப் பதிப்பு, மக்கள் பதிப்பு என இருவகைப்படுத்தி முதலாயிரத்தைச் சீர் பிரித்து மக்கள் பதிப்பாக மர்ரே எஸ். ராஜம் மூலம் வெளியிட்டார். இதன் விலை ஒரு ரூபாய்.அவருடைய புறத்திரட்டுப் பதிப்பு அதுவரையிலும் அகப்படாத பல இலக்கியச் செய்யுட்களைக் காண வழி வகுத்தது. வளையாபதி குண்டலகேசிச் செய்யுட்கள் பல கிடைக்கப்பெற்றன.இந்திய வரலாற்றுக் கழகத்தின் வாயிலாக இந்திய வரலாற்றுத் தொகுதியில் தமிழ் வரலாறு முதன் முதலில் எழுதியது குறிப்பிடத்தக்கது.1951-இல் நடைபெற்ற மாநாட்டில் திராவிட மொழிப் பகுதிக்குத் தலைமை ஏற்றார். அப்போது, அவர் வெளியிட்ட ஆய்வு அட்டவணையில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பணிகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியில் செய்ய வேண்டிய ஆய்வுகள் பற்றிய இந்த அட்டவணை (திராவிட மொழிகளில் ஆராய்ச்சி) அவரது இலக்கிய, மொழியாய்வின் ஆழத்தைக் குறிக்கும்.தமிழ் இலக்கியத்தைச் சமுதாயத்துடன் பொருத்திப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் பேராசிரியர் முதன்மையானவர். இதை கைலாசபதி போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இலக்கியத்தைச் சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அணுகுமுறையைப் பேராசிரியர் கீழ்க்கண்டவாறு தருகிறார். 'ஒரு சமுதாயம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ அவ்வகை இலக்கியம்தான் அவ்வக்காலத்து உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்துக்கும் மிக நெருங்கிய விட்டு விலகாத தொடர்பு உண்டு (காவிய காலம்: 22-23).தொல்காப்பியர், திருவள்ளுவர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள், டி.கே.சி. முதலான 24 தமிழ் அறிஞர் பெருமக்களின் வரலாறுகளை 'தமிழ்ச் சுடர்மணிகள்' என்ற நூலில் எழுதியுள்ளார்.தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியவர் (தமிழின் மறுமலர்ச்சி பக்.60-61) பேராசிரியர். ஆங்கில மொழிக் கல்வி வேறு; ஆங்கில மொழிவழிக் கல்வி வேறு என்பதை நன்குணர்ந்திருந்தார். ஆங்கில மொழிவழிக் கல்வி அவருக்கு உடன்பாடன்று.தாய்மொழியாம் தமிழைப் பற்றிக் கூறுகையில் 'நமது தாய் மொழிகளும் அவற்றிலுள்ள நூல்களும் வளத்திலும் தொன்மையிலும் வடமொழிக்குச் சமானவைகளாகும். தமிழ் மொழியை எடுத்துக்கொண்டால் இது மிகவும் உண்மை என்பது புலப்படும். தமிழிலுள்ள இலக்கியம் கிறிஸ்து சகாப்தத்திலேயே தோன்றத் தொடங்கியவை எனலாம். கவிதையின் பெருமையை நோக்கினாலும் நமது மொழிகள் வடமொழிக்கு ஒரு சிறிதும் பிற்பட்டவையில்லை. இவற்றால் நமக்குள்ள பெருமை நியாயமானதேயாகும்' என்கிறார்.தமிழறிஞருக்குப் பிறமொழி அறிவு தேவை என்பதை வலியுறுத்துகிறார். 'வியாசன், வால்மீகி, காளிதாசன் என்பவர்களைப் பற்றியும், வள்ளுவர், கம்பன் என்பவர்களைப் பற்றியும், பம்பா, ரம்பா, பொன்னா என்பவர்களைப் பற்றியும், எழுத்தச்சனைப் பற்றியும் அறியாதவனைத் திராவிட மொழிகளில் ஒன்றிலேனும் வல்லவன் என்று எவ்வாறு கூற முடியும்? திராவிட இலக்கியங்களையும் இந்திய இலக்கியங்களையும் ஒப்பு நோக்கிக் கற்றவனுடைய கல்வியறிவு மிகவும் பரந்துள்ளதாயும் இருத்தல் ஒருதலை.இவ்வாறு பல்வேறு நோக்குகளில் தமிழாராய்ச்சியைத் தொட்டுத் துலக்கிக் கருத்துகளை வெளியிட்டவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை.நாளை (அக்.12) எஸ்.வையாபுரிப் பிள்ளையின்135-ஆவது பிறந்தநாள்.