மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதனால் உருவாகும் பலன் மக்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (அக். 11) தெரிவித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடக்கி வைத்தார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:2036 ஆம் ஆண்டில் 1.5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு வளரும். அதற்காக பல்வேறு திட்டங்களை அரசு தீட்டி வருகிறது. உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்கள் நம் மிகப்பெரிய பலம். அவர்களின் திறமையை உலக அளவிலான நகர்வில் இணைப்பதே நமது இலக்கு. தொன்மையான மொழியைக்கொண்ட தமிழ்நாடு சிறப்பான வரலாறு, கட்டடக்கலை, பண்புகளால் தனித்துவம் பெற்றுள்ளது.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை தத்துவத்தின் அடிப்படையில் அனைவரையும் ஒருங்கிணைத்த வளர்ச்சியை இலக்காகக்கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில், அறிவியல், இலக்கியம், சமூகநீதி ஆகியவற்றில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை தமிழ்நாடு அளித்து வருகிறது.மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் மக்களிடம் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறையாக உள்ளது.வளர்ச்சியை நோக்கி வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வளர்ச்சியின் பயன் சென்னையை தாண்டி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றடைய வேண்டும் என செயல்பட்டு வருகிறோம் என முதல்வர் பேசினார். சென்னையைப் போன்று தமிழகம் முழுக்க வளர்ச்சி தேவை: முதல்வர் விஜய்Central and State governments must work together: Chief Minister Vijay