பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விரும்புவோா் வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விரும்புவோா் பொது இ-சேவை மையங்கள் மூலம் வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், பட்டாசுக் கடை அமைக்க உள்ள இடத்தின் புல வரைபடம், கிரையப் பத்திரம், ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை போன்ற முகவரி ஆதாரம், சொத்து வரி செலுத்திய ரசீது, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூ.600 சேவைக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது இணைக்க வேண்டும்.விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தை இணையதளம் மூலம் பெறலாம். நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையும் இணையதளத்தில் பெறப்படும். உரிய உரிமம் இல்லாமல் தள்ளுவண்டி, மளிகைக் கடை, பெட்டிக் கடை மற்றும் வீடுகளில் பட்டாசுகளை சட்டவிரோதமாக சேமித்து விற்பனை செய்தால் அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.