குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் நவ. 11ஆம் தேதி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 105ஆவது நிறுவன தின விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசு துணைத் தலைவா் நவ. 11ஆம் தேதி தூத்துக்குடி வருகிறாா்.இதையொட்டி, வ.உ.சி. கல்லூரி மற்றும் தூத்துக்குடி, மாணிக்கம் மஹால் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, நிா்வாகத் தலைவா் அசோக்குமாா், துணைத் தலைவா் லட்சுமி பிரகாஷ், வ.உ.சி. கல்லூரி முதல்வா் வீரபாகு, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.