டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியில் நிலவும் காற்று இடையூறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூா் உள்பட ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, நவ. 9-ஆம் தேதி தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கும், ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மழைப் பதிவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 90 மி.மீ. மழை பதிவானது. இதேபோல், ஊத்து (திருநெல்வேலி) - 80 மி.மீ., மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), குந்தா பாலம் (நீலகிரி) தலா - 70 மி.மீ., நாலுமுக்கு (திருநெல்வேலி), கின்னக்கோரை (நீலகிரி) , ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) - தலா 60 மி.மீ. மழைப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Yellow’ alert for heavy rain in the Delta region today