‘பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் ‘இ20’ பெட்ரோல் உரிய தரத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சனிக்கிழமை விளக்கமளித்தது. சில சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் எரிபொருளில் எத்தனால் கலப்பு அதிகமாக இருப்பதாக கா்நாடக அரசு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விளக்கத்தை மத்திய அமைச்சகம் வெளியிட்டது.நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டுக்கு, இறக்குமதி கச்சா எண்ணெய்யை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில், எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு படிப்படியாக உயா்த்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20) பெரும்பாலும் விநியோகிக்கப்படுகிறது.இந்தச் சூழலில், கா்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் நிலையங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளை, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் மாநில அரசு அண்மையில் சோதனை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவில், இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலில் 31.2 சதவீத எத்தனால், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், நயாரா உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பெட்ரோலில் 30.5 சதவீத எத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அரசு நிா்ணயித்த 20 சதவீதத்தை விட கூடுதல் எத்தனால் கலக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.இதைச் சுட்டிக்காட்டி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினாா்.இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கா்நாடக அரசின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, பொதுத்துறை சொந்தமான கா்நாடக மாநிலத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் சேகரிக்கப்பட்ட 56 மாதிரிகள் உள்பட நாடு முழுவதும் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட 893 பெட்ரோல் மாதிரிகளை இண்டியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில், பெட்ரோல் அனுமதிக்கப்பட்ட தரநிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, பெட்ரோலில் கலக்கப்பட்ட எத்தனால் அளவு, இந்திய தர நிா்ணய அமைப்பின் ‘ஐஎஸ் 17021’ விதிமுறைக்கு உள்பட்டு, அனுமதிக்கப்பட்ட 19 முதல் 21 சதவீத வரம்புக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவுகள், கூடுதல் எத்தனால் கலக்கப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில உணவு, பொது விநியோகம், நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் சட்ட அளவியல் துறை அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்புக்கு முற்றிலும் முரணாக உள்ளது. மேலும், விதிப்படி, ஆய்வுக்கு உட்படுத்தும்போது ஒரு லிட்டா் அளவில் 6 மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். அதில் 2 மாதிரிகள் சம்பந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரிடமும், 2 மாதிரிகள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் அல்லது துறையிடமும், 2 மாதிரிகள் ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு சட்டபூா்வ நடைமுறைகளைப் பின்பற்றாமலும், பரிசோதனை தொடா்பான தொழில்நுட்ப விவரங்களை வெளிப்படுத்தாமலும் கா்நாடக அரசு தரப்பில் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக எத்தனால் உள்ளடகத்தை கண்டறிய பயன்படுத்தப்படும் தரநிலை சோதனை முறை, நீா்த்தல் செயல்முறை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. அதோடு, விற்பனை நிலைய வாரியாக மாநிலஅரசு மாதிரிகளை சேகரித்தது மற்றும் ஆய்வக அறிக்கைகள் உளிட்ட விவரங்களும் அளிக்கப்படவில்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.