தீபாவளி! மதுரை மலர்ச் சந்தையில் இருமடங்காக உயர்ந்த பூக்களின் விலை!

Wait 5 sec.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மல்லிகை நேற்றைவிட ரூ. 400 உயர்ந்து கிலோ ரூ. 1,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனகாம்பரம் வரத்து மிகவும் குறைந்ததால் கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கு விற்பனையாவதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி பாலமேடு அலங்காநல்லூர் சத்திரப்பட்டி மேலூர் கொட்டாம்பட்டி திருப்பரங்குன்றம் திருமங்கலம் ஆகிய மதுரை மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் மலர்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உண்டு. அதன் மணம், தரம் ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் காரணமாக மதுரையிலிருந்து விமானத்தின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, துபை உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடுமையான ஏற்றம் காணப்படுகிறது. மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்மதுரை மல்லி கிலோ ரூ. 1800, பிச்சி ரூ. 1000, முல்லை ரூ. 1000, செவ்வந்தி ரூ. 150, சம்பங்கி ரூ. 150, செண்டு மல்லி ரூ. 70, கனகாம்பரம் ரூ. 2000 , ரோஸ் ரூ. 150, பட்டன் ரோஸ் ரூ. 200, பன்னீர் ரோஸ் ரூ. 250, கோழிக்கொண்டை ரூ. 100, அரளி ரூ. 450, மரிக்கொழுந்து ரூ. 100, தாமரை (ஒன்றுக்கு) ரூ. 35 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், மதுரை மல்லிகை வரத்து 3 டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. காரணம் விளைச்சல் குறைந்ததுதான். நாளையும் இதே விலை நிலவரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இன்று காலை கிலோ ரூ. 1,500க்கு மதுரை மல்லிகை விற்ற நிலையில் நேரம் செல்ல செல்ல பூக்களின் விலை அதிகரித்து வருகிறது' என்றார்.