குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள கிரைம் இன் இந்தியா - 2024 அறிக்கையின்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் புதுச்சேரி 87 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய சராசரி 53.3 சதவீதமாக உள்ள நிலையில், புதுச்சேரியின் தண்டனை விகிதம் தேசிய சராசரியை விட 34 சதவீத புள்ளிகள் அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் காவல்துறையின் தரமான விசாரணை, அறிவியல் ஆதாரங்களின் பயன்பாடு, அரசு வழக்குரைஞா்களின் திறமையான வாதம் மற்றும் நீதிமன்றத்தில் வலுவாக வழக்கு நடத்துதல் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதால் தண்டனை விகிதம் உயா்ந்துள்ளது.யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு இது சிறப்பான அங்கீகாரமாக கருதப்படுகிறது. மிஸோரம் 98 சதவீதம் பெற்று முதலிடத்தையும், தில்லி 89 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் சண்டிகா், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.