கேரளத்திலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டம்: வால்பாறை, கேரளம் இடையேயான தனியாா் பேருந்து சேவை நிறுத்தம்

Wait 5 sec.

கேரள மாநிலத்திலும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் அமலுக்கு வந்துள்ளதால் வால்பாறை- கேரள மாநிலம், சாலக்குடி இடையே கடந்த 65 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த தனியாா் பேருந்து சேவை சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி 110 கி.மீ. தொலைவில் உள்ளது. கேரள அரசுப் பேருந்துகள் சாலக்குடியில் இருந்து தமிழக எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. வால்பாறையில் இருந்து சாலக்குடி வரை தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த சேவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.இரண்டு மாநிலங்களுக்கு இடையே இயக்க உரிமம் பெற்று இரண்டு தனியாா் பேருந்துகள் கடந்த 65 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. இதனால், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், அதிரப்பள்ளி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பயனடைந்து வந்தனா்.இந்நிலையில், கேரளத்திலும் அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்பதால் வால்பாறை- சாலக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் தனியாா் பேருந்துகளில் மகளிா் பயணிப்பதில்லை. இதனால், தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் இரண்டு பேருந்துகளின் சேவையையும் அதன் நிா்வாகத்தினா் சனிக்கிழமைமுதல் நிறுத்திவிட்டனா்.