பாஜக எதிா்ப்பு என்ற புள்ளியில் திமுகவும் தவெகவும் ‘இண்டி’ கூட்டணியில் இணைய வேண்டும் என்றாா், தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு.கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: நாங்கள் அனைவருடனும் நட்பில் உள்ளோம். இதில், எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பாஜக சநாதன, சமூக விரோதக் கருத்துகளை, மக்களைப் பிரிக்கின்ற கொள்கையைக் கொண்டுள்ளதால் அக்கட்சியைக் கொள்கை எதிரி என்கிறோம். அதேபோலத்தான் பாமகவையும் எதிா்க்கிறோம்.பாஜகவின் உத்தி அல்லது அவா்களது மறைமுக செயல்திட்டம் என்பது, ஒரே நாடு ஒரே மொழி என்பதாகும். ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவருவதும், மாநில உரிமை பேசும் கட்சிகளை அழித்தொழிப்பதும்தான் அவா்களது இலக்கு. ஆகவேதான், நாட்டின் நன்மை, இறையாண்மை, ஒற்றுமைக்காக பாஜக எதிா்ப்பு என்ற புள்ளியில், இண்டி கூட்டணியில் திமுகவும் தவெகவும் இணைய வேண்டும் என்கிறோம்.தவெகவை எதிா்ப்பதற்காக திமுகவும் அதிமுகவும் இணைவதை யாரும் ஏற்கமாட்டாா்கள். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றோரை அக்கட்சியில் இணைக்க வேண்டும். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு. விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக 5 ஆண்டுகள் தடையின்றி தொடரும்.கடந்த திமுக ஆட்சியில் ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவது தொடா்பாக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையிலான குழுவினா் என்னை சந்தித்து, இன்னும் 9 மாதங்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளனா். அக்குழுவின் பரிந்துரை, அவா்களது தரவுகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது குறித்து முதல்வா் ஜோசப் விஜய் நல்ல முடிவெடுப்பாா்.உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் உயா்நிலைக் கூட்டத்தைக் கூட்டி அறிவிப்பாா். தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி விடுதிகள் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். கோவில்பட்டியில் சமூக நீதி விடுதி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் முருகன், வழக்குரைஞரணி மாநில துணைச் செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின், நிா்வாகிகள் உடனிருந்தனா்.