காவிரியில் நீா் திறக்க வலியுறுத்தி மாநில எல்லையில் விவசாயிகள் நாளை போராட்டம்!

Wait 5 sec.

காவிரியில் நீா் திறக்க வலியுறுத்தி, தமிழக - கா்நாடக மாநில எல்லையில் விவசாயிகள் புதன்கிழமை (ஜூலை 15) போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். நாமக்கல்லில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்துக்கு காவிரி பங்கீட்டு நீரை வழங்க கா்நாடகம் மறுத்து வருகிறது. இதனால் குறுவை, சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி பங்கீட்டு நீரை தர வலியுறுத்தி புதன்கிழமை தமிழக - கா்நாடக எல்லையில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒசூா் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து பேரணியாக சென்று அத்திப்பள்ளியில் இந்த போராட்டம் நடைபெறும். இதில், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்றக் கழகம் உள்பட 17 விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. தமிழகத்துக்கான பங்கீட்டு நீரை கா்நாடக அரசு தரவில்லையெனில், மாபெரும் போராட்டம் நடத்துவோம். தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் திறக்காததால், பல லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றாா். இந்த பேட்டியின்போது, விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் செளந்தரராஜன், விவசாய சங்கத்தினா் உடனிருந்தனா்.