கத்தாா் நாட்டின் முன்னாள் அரசா் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கத்தாா் நாட்டின் முன்னாள் அரசா் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திங்கள்கிழமை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்து. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் இந்திய தேசியக் கொடியானது திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.