புதிய அரசு தமிழகத்தில் அமைந்தவுடன் பல இடங்களில் புதிய உள்ளாட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்தப் பயிற்சிகளில் நானும் கலந்துகொண்டு வகுப்பு எடுத்து வருகிறேன். இன்னும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் ஒரு சமூக இயக்கம் அண்மைக் காலங்களில் பத்து பயிற்சி முகாம்களை உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நடத்தி இருக்கிறது. அந்த முகாம்களில் சுமார் 750-க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று இன்று களத்தில் இருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், இவர்கள் அந்த ஊரில் சமூகத்துக்கு வழிகாட்டும் வல்லமை பெற்றவர்களாக செயல்படுவார்கள் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயிற்சி முகாமுக்கு வரவேண்டும், பங்குபெற வேண்டும் என்று விரும்புவோர் செய்ய வேண்டியது, தங்களை பதிவு செய்துவிட்டு முகாம் நடக்கக்கூடிய இடத்துக்கு தங்கள் செலவில் வந்து சேரவேண்டியது மட்டும்தான். அந்த முகாம் என்பது 'வையத் தலைமை கொள்' என்ற தலைப்பில் நிகழ்ந்தாலும் கிராமத்துக்கு, பொறுப்பெடுக்கும் மனிதர்களுக்கு ஒரு புதிய தலைமைத்துவத்தை கற்றுத்தரும் பயிற்சியாக கட்டமைத்து அதை ஓர் அறிமுகப் பயிற்சியாகவே நடத்தப்படுகிறது. இது ஒரு முழு பஞ்சாயத்துக்கான பயிற்சி அல்ல. 'புதிய ஊராட்சி அரசு' குறித்த புரிதலை ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு காந்திகிராமத்தில் ஐந்து நாள்கள் நடத்துவது உண்டு. அந்த ஐந்து நாள்களிலும் முழுமையாக தேவையான கருத்துகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. சுமார் 8,000 பேருக்கு பயிற்சியளித்தோம். அது மட்டுமல்ல, ஆண்டுதோறும் அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியையும் நடத்தினோம். அப்படி இருந்துமே அது ஒரு முழுமை பெற்ற பயிற்சி என்று கூறமுடியாது. எனவே, இந்த இரண்டு நாள் பயிற்சியில் முழுமையாக அனைத்து ஊராட்சி குறித்த கருத்துகளையும் கொண்டு சேர்க்க இயலாது. ஆனால், கிராமத்துக்கு, கிராம மேம்பாட்டுக்குப் பொறுப்பேற்க நான் தயாராக இருக்கிறேன் என்று வருபவருக்கு ஓர் அறிமுகப் பயிற்சியளித்து அவர்களை இணைய வழியில் வாரந்தோறும் வியாழன் இரவு 8 மணிக்கு இணைய வைத்து, ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விவாதம், கலந்துரையாடல் கேள்வி- பதில், நிர்வாகக் கையேட்டில் உள்ள அத்தியாயங்களைப் படிப்பது எனத் திட்டமிட்டு தொடர் பயிற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி என்பது புதிய ஊராட்சி என்பது ஓர் அரசு; அதில் சட்டபூர்வமாக மக்களுக்குப் பொறுப்புடன் பணி செய்ய முடியும் என்பதைக் கடந்து, கிராமத்தில் மக்களை எப்படி ஒருங்கிணைத்து கிராம மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்பதை மையப்படுத்தியே இந்தப் பயிற்சியை வடிவமைத்துக் கொடுத்து வருகிறோம். கிராமத்தில் இன்று மக்கள் சமூகமாக வாழ்ந்த கலாசாரம் மறைந்து தனித்து வாழ்ந்து வருகின்றனர்.இந்தப் பயிற்சியில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதுவரை பஞ்சாயத்துச் செயல்பாடு அல்லது கிராம முன்னேற்றம் அல்லது கிராம மேம்பாடு என்பதை சாலை அமைப்பது, கட்டடம் கட்டுவது, தண்ணீர் தருவது, தெருவிளக்கு பராமரிப்பது, குப்பை கூட்டுவது என்பதுதான். அனைத்தும் கட்டுமானப் பணிகளே. மக்களை மேம்படுத்துவது என்பதை மேம்பாடாக பார்க்க யாரும் கற்றத் தரவில்லை. இந்தக் கருத்தாக்கத்திலிருந்து மக்களை ஒருங்கிணைப்பது, ஒற்றுமைப்படுத்துவது, கிராமத்துக்குப் பொறுப்பெடுக்க வைப்பது என்ற புதிய பார்வையை உருவாக்குவதை மையப்படுத்தியதாக இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இன்றைய கிராமத்து மக்களின் உளவியல், 'அரசு அனைத்தையும் பார்த்துக்கொள்ளும், நாம் அரசு தரும் பலன்களை பெறும் பயனாளி, அந்தப் பலன் எனக்குக் கிடைக்கவில்லை என்றால் நான் மனுதாரர் என்ற உளவியலைக் கடந்து நாங்கள் குடிமக்கள், இந்தக் கிராமத்தை மேம்படுத்துவது எங்கள் பொறுப்பு, அதில் எங்கள் பங்கு மிக முக்கியமானது' என்ற கருத்தாக்கத்தை மையப்படுத்தியும் இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறது; 'என் கிராமம், என் பொறுப்பு' என்ற உளவியலை நோக்கி கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. பொதுவாக, நம் நாட்டில் ஒற்றைத் தலைமையை மையப்படுத்தியதாகவே நம் அரசியல், ஆளுகை என அனைத்தும் கட்டமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கிராமப்புற மேம்பாடு, கிராம ஊராட்சி அரசு என்று நாம் விவாதிக்கும்போது, அது மக்களை மையப்படுத்தியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை முழுமையாகப் பயன்படுத்த ஒரு புதிய தலைமை தேவைப்படுகிறது; அது மேய்க்கும் மேடைத் தலைமை அல்ல; அது வழிகாட்டும் தலைமை. அது ஒரு கூட்டுத் தலைமை; அந்தத் தலைமையை எப்படி நாம் உருவாக்கிக் கொண்டு செயல்படுவது என்பதை மையப்படுத்தி இந்தப் பயிற்சி தரப்படுகிறது.இந்தத் தலைமைத்துவத்தில் எது விளக்கப்படுகிறது என்றால், காந்தியின் நிர்மாண ஊழியர்களின் பண்புகளும், விவேகானந்தரின் நூறு இளைஞர்களின் பண்புகளும்தான். இதன்மூலம்தான் ஒரு மாற்றம் பெற்ற மனிதர், தான் தன்னை இழந்த சமூகத்துக்கான மனிதர் என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னை எப்படிச் செயல்பாட்டின் வழியில் மாற்றிக்கொள்வது என்பது விளக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் எப்படி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மையப்படுத்துவதில்லை. மாறாக, தேர்தலை நியாயமாக எப்படி சந்திப்பது என்பதை மட்டுமே அவர்களிடம் விளக்கும்போது, அவர்களுக்கு ஒன்று புரிந்து விடுகிறது. கிராமத்துக்கு ஊராட்சித் தலைவராக வருவது மிக எளிது. ஆனால், கிராமத்தை மாற்றுவது, மக்களை மேம்படுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, மக்களை மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்க வைப்பது, கிராமத்துக்கு மக்களை பொறுப்பேற்க வைப்பது என்பது எளிதான செயல் அல்ல. அதைச் செய்வதற்குத்தான் இந்தப் புதிய தலைமை என்பது தெளிவாகிவிடும். கிராம மேம்பாட்டுக்கு அடிப்படை கட்டுமானப் பணிகள் அல்ல. மக்களை ஒற்றுமைப்படுத்துவது, ஒருங்கிணைப்பது, கிராமத்துச் செயல்பாடுகளில் பங்கேற்க வைப்பது. இந்தப் பணிகளை ஒற்றை மனிதரால் செய்ய இயலாது. அது ஒரு கூட்டுத் தலைமையால்தான் முடியும். எனவே, ஒவ்வொரு கிராமத்தையும் மேம்படுத்த ஒரு குழு பொறுப்பெடுக்க வேண்டும். அந்தக் குழு அதிகாரத்தை நோக்கியதாக, சுயநலம் நோக்கியதாக பதவியை நோக்கியதாக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட சுயநலமற்ற மனிதர்கள் கிராமத்தில் ஒன்றிணைய வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள். அவர்கள் தனித்தனியே விதியை நொந்து வீடுகளுக்குள் இருக்கிறார்கள். அவர்களை முதலில் ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் இன்றைய முதல் பணி என்பதை விளக்குவது இந்தப் பயிற்சியின் தனிச் சிறப்பு.அந்தப் பயிற்சியில் கொடுக்கப்படும் உள்ளாட்சி அரசு நிர்வாகக் கையேட்டில் விலையில்லா 136 செயல்பாடுகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இவை இந்தப் பயிற்சியில் பங்கேற்போருக்கு விளக்கப்படுகிறது. அதை எப்படிச் செய்வது என்பதுதான் இந்தப் பயிற்சியில் கற்றுத் தரப்படுகிறது. பொதுவாக, ஒவ்வொரு முகாமிலும் முகாமிற்கு வந்து பயிற்சி பெற்று திரும்பும்போது ஒரு பின்னூட்டம் தருவார்கள். அதில், கிராமத்தை மேம்படுத்த ஊராட்சித் தலைவர் பதவிக்கு வந்தாலும் வராவிட்டாலும், கிராமத்தில் ஒரு குழுவை உருவாக்கி மக்களுடன் இணைந்து செயல்படும்போது, 'கிராமம் மாறும் மேம்படும் என்ற உணர்வை இந்தப் பயிற்சியில் பெற்றோம்' என்று கூறுவார்கள்.இந்தப் பயிற்சியில் மக்களை ஒன்றிணைக்க, மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்த சமூகக் கண்ணோட்டத்தை உருவாக்க ஒரு புதிய உளவியலை உருவாக்கத் தேவையான உத்திகளை மட்டும் விவாதிப்போம். அப்படி மக்களை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தத் தேவையான அத்தனை செயல்திட்டங்களையும் அவர்களிடம் விவாதிப்பதுண்டு. ஆற்றலைப் பெருக்கி மக்களை இணைத்து கிராமத்தில் ஒற்றுமையுடன் ஒரே சமூகமாக வாழ வழிகாட்ட தலைமை இல்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் இந்தப் பயிற்சி. இதில் கலந்து கொண்டவர்கள், தொடர் இணைப்பில் வாரந்தோறும் நடக்கும் இணைய வழி சந்திப்பில் கலந்து கொண்டால், சமூகம் தேடும் திறன் மிக்க மனிதராக பயிற்சிக்கு வந்த ஒவ்வொருவரும் மாறிவிடுவர்.இந்தத் தயாரிப்பில் உருவான மனிதர்கள் புதிய வார்ப்புகளாக, விவேகானந்தர் கூறிய முழு மனிதர்களாக மாறிவிடுவார்கள் என்ற பெரு நம்பிக்கையில்தான் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதற்குத் தேவை கிராமத்தை மாற்ற நான் தயார் என்றால் இந்த சமூக இயக்கம் ஒரு தரமான பயிற்சியைத் தருவது மட்டுமல்ல, அவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டி, ஒரு கிராமத்தில் மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கத்தை உருவாக்க உறுதுணையாக நிற்கும் என்பதை வலியுறுத்தி அந்த அறிமுகப் பயிற்சியை ஒவ்வொரு முகாமிலும் நிறைவு செய்கிறது.கட்டுரையாளர்: பேராசிரியர்.