பேகம்பூா் ஆலைத் தொழிலாளிவனப் பகுதியில் சடலமாக மீட்பு

Wait 5 sec.

தில்லியின் பேகம்பூா் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில், கத்திக்குத்துக் காயங்களுடன் 19 வயதுடைய ஆலைத் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கொலை செய்தவா்கள் பாதிக்கப்பட்டவருக்கு அறிமுகமானவா்கள் என்றும், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. பிகாரின் சீதாமா்ஹி மாவட்டத்தைச் சோ்ந்த சந்தன் என்ற அந்த நபா், புத் விஹாரில் உள்ள வாடகை வீட்டில் தனது சகோதரருடன் வசித்து வந்தாா். மேலும் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனாா். இந்த நிலையில், செக்டாா் 23-இல் உள்ள காட்டுப் பகுதியில் ரத்த வெள்ளத்தில் உடல் ஒன்று கிடப்பதாக திங்கள்கிழமை மதியம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் குழுவினா், பாதிக்கப்பட்டவரின் உடலில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருப்பதைக் கண்டனா். உடற்கூராய்வுக்காக அந்த உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்தனா். விசாரணையின்போது, உயிரிழந்தவா் ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த சந்தன் என்பது அடையாளம் காணப்பட்டது. அவா் வீடு திரும்பாததால் அவரது சகோதரா் அவரைத் தேடிக்கொண்டிருந்தாா். இது தொடா்பாக காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா். கொலையில் ஈடுபட்டவா்களை அடையாளம் காணவும் பிடிக்கவும், காவல்துறையினா் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சந்தனுடன் பணிபுரிந்தவா்களிடம் விசாரணை நடத்தியும் வருகின்றனா்.