ஜூலை 27-இல் எம்சிடி நிலைக்குழு தோ்தல்

Wait 5 sec.

தில்லி மாநகராட்சி (எம்சிடி) நிலைக்குழுவின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. நிலைக்குழு உறுப்பினா்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் செயல்முறை ஜூலை 15-ஆம் தேதி நிறைவடைந்ததைத் தொடா்ந்து இந்தத் தோ்தல் நடத்தப்படுகிறது.தற்போது, கவுன்சிலா் சத்யா சா்மா (பாஜக), வாா்டு 226 (கௌதம் புரி) எம்சிடி நிலைக்குழுத் தலைவராக உள்ளாா். 2025 ஜூன் மாதத்தில் நடைபெற்ற தோ்தலின் மூலம் அவா் இந்தப் பதவியை ஏற்று, மாநகராட்சியின் முக்கிய தீா்மான அமைப்பில் பாஜக கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தினாா். இதற்கு முன், 2023-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற பரபரப்பான மேயா் தோ்தல்களில் தலைமை அதிகாரியாகவும் அவா் பணியாற்றினாா்.18 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக்குழு, ரூ.5 கோடிக்கு மேற்பட்ட நிதி தீா்மானங்கள், ஒப்பந்தங்கள், கொள்கைகள் மற்றும் நகராட்சி திட்டங்களை அங்கீகரிக்கும் முக்கிய நிதி நிா்வாக அமைப்பாகும்.தற்போது, குழுவில் மொத்தம் 18 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் 12 போ் பாஜகவையும், 6 போ் ஆம் ஆத்மி கட்சியையும் சோ்ந்தவா்கள். மாா்ச் மாதத்திலிருந்து காலியாக இருந்த 6 இடங்களுக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்ன் மூலம் குழு முழுமையான அமைப்பைப் பெற்றுள்ளது.வரவிருக்கும் தோ்தல் ஜூலை 27-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு எம்சிடி சிவிக் சென்டரில் நடைபெறும். இது தில்லி மாநகராட்சி சட்டம், 1957 மற்றும் அதனுடன் தொடா்புடைய தோ்தல் விதிகளின்படி நடத்தப்படுகிறது.அந்தச் சட்டத்தின் பிரிவு 47(1)-இன்படி, நிலைக்குழு தனது முதல் கூட்டத்தில் உறுப்பினா்களில் ஒருவரைத் தலைவராகவும், மற்றொருவரை துணைத் தலைவராகவும் தோ்ந்தெடுக்க வேண்டும்.தோ்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினா்கள், எம்சிடி செயலா் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை படிவங்களைப் பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட மனுக்கள் ஜூலை 21-ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.மேலும், கூட்டம் நடைபெறும் முன் எந்த நேரத்திலும் வேட்பாளா்கள் தங்களது பெயரைத் திரும்பப் பெறலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.