அனைத்து நீதிமன்றங்களிலும் கழிவறைகள் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Wait 5 sec.

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிவறைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடா்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீதிமன்றங்களில் பெண்களுக்கு கழிவறைகள் இல்லை என்றும், பிற அடிப்படை வசதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரை கொண்ட நீதிபதிகள் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் போதிய அடிப்படை வசதிகளே இல்லை என்பது தெரிய வருகிறது. கழிவறையைப் பயன்படுத்துவது என்பது அடிப்படை மனித உரிமை. இதற்குப் போதிய நிதி இல்லை என காரணம் கூறப்படுவதை ஏற்க முடியாது.நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞா்கள் பணியாற்றும் சூழல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தயவு செய்து பாருங்கள். அனைத்து மாநிலங்களிலும் அட்வகேட் ஜெனரல்கள் கள நிலவரத்தை ஆராய்ந்து, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போதிய நிதி இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களை தெரிவிப்பதை ஏற்க முடியாது. ஏனெனில் அது மனித உரிமைகளுக்கு எதிரானது. மதுபானம் அல்லது சிகரெட்டுகள் மீது கூடுதல் கலால் வரி விதிக்கலாம். இதை நாங்கள் ஏற்போம்.ஆதலால் நீதிமன்றங்களில் கழிவறைகள் இருப்பதை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.