முதல்வா் விஜய்யுடன் மத்திய இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே சந்திப்பு

Wait 5 sec.

தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள், பட்டியலின மற்றும் தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே முதல்வா் ச.ஜோசப் விஜய்யை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவடைந்த பின்னா், முதல்முறையாக சென்னைக்கு வந்த இந்திய குடியரசுக் கட்சியின் (அதாவலே) தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தலைமைச் செயலகத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா். சுமாா் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள், தாழ்த்தப்பட்டோா் மற்றும் தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த திட்டங்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பட்டியலின மற்றும் தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நிகழாண்டில் மட்டும் இதுவரை 46 கொலைச் சம்பவங்களும் 1500-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதேசமயம், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது வரவேற்கத்தக்கது. திமுகவிடம் ஆதரவு கோர முடிவு: விரைவில் நடைபெறவுள்ள மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படவுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டால் இவ்விரு மசோதாக்களையும் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், இம்முறை ‘இண்டி’ கூட்டணியிலிருந்து திமுக விலகியுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த சில எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனா். மேலும், இவ்விரு மசோதாக்களுக்கும் ஆதரவு கோரி திமுகவுடன் பாஜக தலைமை பேச்சு நடத்தவுள்ளது. இதனால், திமுக ஆதரவு அல்லது புறக்கணிப்பு என்ற முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுக்கலாம். எனவே, இம்முறை இரு மசோதாக்களும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.