பல்லடம் தாலுகா பகுதியில் விளைநிலத்தில் மின் கோபுரம் அமைப்பது தொடா்பாக விவசாயிகளுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தைக்கு வருவாய் வட்டாட்சியா் (பொறுப்பு) ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் ரமேஷ், திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.இதில், மின் கோபுரம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள விளைநிலங்களின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். அதன் பிறகே மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள், இழப்பீட்டுத் தொகையை வழங்கிய பிறகே பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தனா்.