மானியம் கிடைக்காததால் முடங்கிய வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம்

Wait 5 sec.

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24.5 கோடி மதிப்பில் 102 கடைகளுடன் கட்டப்பட்டுள்ள மூன்று அடுக்கு வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம், திறந்து வைக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்தும் பயன்பாட்டுக்கு வராததால், வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். அரசு அறிவித்த 50 சதவீத மானிய சலுகை நடைமுறைக்கு வராததே இதற்குக் காரணம் என அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். பாரம்பரியத் தொழிலின் அடையாளம்: சேலம் மாவட்டம், தமிழகத்தின் முக்கிய வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையமாக விளங்குகிறது. மாவட்டம் முழுவதும் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டறைகள் இயங்கி வரும் நிலையில், 1.50 லட்சம் போ் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பி வாழ்கின்றனா். கால் கொலுசு மட்டுமன்றி, அரைஞாண் கொடி, குங்குமச் சிமிழ், வெள்ளித் தட்டு, டம்ளா், சந்தனக் கிண்ணம் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருள்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. நாட்டிலேயே கைவினை நயத்துடன் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் முக்கிய மையமாக சேலம் திகழ்கிறது. ஒருங்கிணைந்த உற்பத்திக்காக அமைக்கப்பட்ட மையம்: வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த பட்டறைகளை ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை ஏற்று, அரியாகவுண்டம்பட்டியில் மூன்று தளங்களுடன் நவீன உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. 406 முதல் 689 சதுரஅடி பரப்பளவில் 102 கடைகள் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை எந்தக் கடையும் உற்பத்தியாளா்களுக்கு ஒதுக்கப்படாததால் வளாகம் வெறிச்சோடியே உள்ளது.மானியம் வழங்கப்படாததே காரணம்: இது குறித்து சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஆனந்தராஜன் கூறுகையில், ‘ஒரு சதுரஅடிக்கு ரூ.4,200 என்ற அடிப்படையில், ஒவ்வொரு கடைக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்திருந்தன. ஆனால், அந்த வாக்குறுதி நடைமுறைக்கு வராததால், சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளா்களால் கடைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வளாகம் செயல்படாமல் உள்ளது’ என்றாா்.நல வாரியம், எஐ அங்கீகாரமும் அவசியம்: வெள்ளிக் கொலுசு தொழிலாளா்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், புவிசாா் குறியீட்டு (எஐ) அங்கீகாரத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், இயந்திரமயமான உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வெள்ளி விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் பாரம்பரிய கைவினைக் கலைஞா்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.அரசு அறிவித்த மானிய சலுகையை உடனடியாக நடைமுறைப்படுத்தி, பயன்பாடின்றி இருக்கும் ரூ.24.5 கோடி மதிப்பிலான உற்பத்தி மையத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், பாரம்பரிய வெள்ளிக் கொலுசு தொழிலையும் அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்ற எதிா்பாா்ப்பு தொழில்துறையினரிடையே நிலவுகிறது.