விஜய் டி.வி.யில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார். வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல், இந்த வருடம் நிகழ்ச்சியில் சில மாற்றங்களைப் புகுத்தவிருக்கிறார்களாம். முந்தைய சீசன்களில் சினிமா, டி.வி. நட்சத்திரங்கள், மாடலிங் ஆள்களுடன் பிரபலமல்லாத சாதாரண நபர்களும் போட்டியாளர்களாகப் பங்கேற்று வந்தனர். இவர்கள் பெரும்பாலும் விஜய் டி.வி.யில் பணிபுரியும் ஊழியர்களின் நட்பு வட்டத்திலிருந்தோ அல்லது முந்தைய சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருப்பார்கள். இந்த நிலையில், இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே 'பிக்பாஸ் காமன் மேன்' என்ற ஒரு ஷோவை நடத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்தவர்களில் இருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு 'பிக் பாஸ் காமன் மேன்' ஷோவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பெர்ஃபார்மன்ஸை வைத்து சிறந்த சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.