தமிழகம் - கா்நாடக இடையே அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் சத்தியமங்கலத்தில் பயணிகள் தவிப்பு

Wait 5 sec.

மேக்கேதாட்டு அணை கட்டக் கோரி கா்நாடகத்தில் கன்னட அமைப்பினா் புதன்கிழமை போராட்டம் நடத்தியதால் தமிழகம்-கா்நாடக இடையே அரசுப் பேருந்துகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு, கோவை, திருப்பூா் ஆகிய இடங்களில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கா்நாடக மாநிலத்துக்கு தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி பகுதியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினா் மேக்கேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பிற்பகலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் வழியாக கா்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், கா்நாடகம் செல்லும் பயணிகள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனா். சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் அதில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது,