அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்திய 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி வெற்றிகரமாக நடந்து முடியவிருக்கிறது. உலகில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்றால், அது 'ஃபிஃபா' என்று அழைக்கப்படும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியாகத்தான் இருக்கும்.கால்பந்துக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் 1930 முதல் நான்காண்டு இடைவெளியில் நடைபெறும். இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1948 ஆண்டுகளில் நடைபெறவில்லை. ஓசியானாவில் இருந்து வட அமெரிக்கா வரையில் ஒட்டுமொத்த உலகத்தையும் இணைக்கும் மிகப் பெரிய விளையாட்டு வைபவமாக மாறியிருக்கிறது 'ஃபிஃபா'. அதனால்தான், உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்த பிறகும்கூட அது குறித்த செய்திகள், போட்டியில் ஏற்பட்ட அதிரடி வெற்றி-தோல்விகள், சுவாரஸ்யமான திருப்பங்கள், பின்னணி நடப்புகள் எல்லாமே தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.குழுவுக்கு நான்கு அணிகள் வீதம் 12 குழுக்கள் எனப் பங்குபெறும் 48 அணிகள் வகைப்படுத்தப்பட்டன. மொத்தம் 104 ஆட்டங்கள் நடந்தன. 23-ஆவது உலகக் கோப்பைப் போட்டியில் களமிறங்கிய 1,248 கால்பந்தாட்ட வீரர்களில் 891 பேருக்கு இது முதலாவது உலகக் கோப்பை அனுபவம்.இந்தப் போட்டித் தொடரை நடத்திய மெக்ஸிகோ, கனடா, அமெரிக்கா நாடுகளின் 16 நகரங்களில் உள்ள மைதானங்களில் 39 நாள்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை நேரில் பார்த்தவர்கள் பல்லாயிரம் பேர் என்றால், தொலைக்காட்சி, கைப்பேசிகளில் பார்த்தவர்கள் பல கோடிப் பேர். முதன்முறையாக, உலகக் கோப்பைப் போட்டி, கால்பந்து ரசிகர்களின் உள்ளங்கைக்கு வந்து விட்டிருக்கும் சாதனை ஃபிஃபா 2026-க்குச் சொந்தம்.முதன்முதலில் 1930-இல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி உருகுவே நாட்டில் மோன்டிவிடியோ நகரில் உள்ள மூன்று மைதானங்களில் நடந்தபோது ஒட்டுமொத்த அணிகள் வெறும் 13; 17 நாள்கள்; 18 ஆட்டங்கள் நடைபெற்றன. உருகுவே முதலாவது கோப்பையை வென்றது என்றால், அர்ஜென்டினா இரண்டாவதாக வென்று, இன்று வரை உலகக் கோப்பைப் போட்டிகளில் தவிர்க்க முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.1930-இல் 13 அணிகளுடன் தொடங்கிய கால்பந்து உலகக் கோப்பை, 1934-இல் 16 அணிகளாக உயர்ந்து, 1938-இல் 15-ஆகக் குறைந்தது. உலகப்போர் காரணமாக அடுத்த இரண்டு பந்தயங்கள் தடைபட்டன. 1950-இல் 13 அணிகள்தான் கலந்து கொண்டன. 1982-இல் 24 அணிகள் என்றால், 1998-இல் 34-ஆக உயர்ந்து இந்தத் தடவை 48-ஆக அதிகரித்திருக்கிறது.ஆதிமனிதனின் முதலாவது விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாடுவதாகத்தான் இருந்திருக்கும். அடுத்த விளையாட்டு காலில் எட்டி உதைத்தும், கையால் வீசி எறிந்தும் விளையாடும் விளையாட்டுகளாக இருந்திருக்க வேண்டும். அப்போதே பிறந்து விட்டது பந்து விளையாட்டு எனலாம். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பந்துகளை உருட்டி விளையாடும் அம்மாணை குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.நெய்மர் அதெல்லாம் சரி, இப்போது பரவலாக விளையாடப்படும் கால்பந்தாட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றது எப்படி? கிரிக்கெட்டைப் போலவே, கால்பந்தும் இங்கிலாந்தைப் பூர்விகமாகக் கொண்ட விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபுக்கள், சாவகாசமாகத் தங்களது பொழுதைக் கழிக்க உருவாக்கிய விளையாட்டுகள் கோல்ஃபும், கிரிக்கெட்டும் என்றால், அந்த நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த ஓய்வு நேரத்தை விறுவிறுப்பாகப் பொழுதுபோக்க உருவாக்கிக் கொண்ட விளையாட்டுத்தான் கால்பந்து.இங்கிலாந்தில் ஆயுதத் தொழிற்சாலை ஊழியர்கள் தொடங்கிய 'ஆர்சனல்' அணியும், ரயில்வே நிறுவன ஊழியர்கள் தொடங்கிய 'மான்செஸ்டர் யுனைடெட்' அணியும் இப்போது புகழ்பெற்ற கால்பந்து அணிகளாக (கிளப்) விளங்குகின்றன. அதுபோலவே, புலம்பெயர்ந்த இத்தாலியத் தொழிலாளர்கள் அர்ஜென்டினாவின் போகா ஜூனியர்ஸ் கிளப்பை உருவாக்கினார்கள். ஸ்பெயின், ஃபிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எல்லாம், கோடைக் காலம் வந்துவிட்டால் கால்பந்து மைதானங்கள் களைகட்டத் தொடங்குகின்றன.இங்கிலாந்தின் பஞ்சாலைத் தொழிலாளர்கள், நிலக்கரிச் சுரங்கங்களின் பணியாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் போன்ற, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரின் விளையாட்டாகத் தொடங்கிய கால்பந்து, ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட காலனிகளுக்கும் பரவியது. அதனால் தான் தென் அமெரிக்க நாடுகள் கால்பந்து விளையாட்டுக்கு அடிமையாயின.அடுத்த கட்டமாக, ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பர் இனத்தவர்கள், தாமதிக்காமல் கால்பந்தாட்டத்தை எடுத்துக் கொண்டு விட்டனர். அவர்களைப் பார்த்து ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அவர்களது பூர்விக நாடுகளும் கால்பந்துக்கு அடிமையாகின. இப்போது எந்த ஒரு ஐரோப்பிய அமெரிக்கா அணியிலும் கறுப்பர் இனத்தவர்கள் இல்லாமல் அணிகள் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டது. இனிமேல் ஃபிஃபா குறித்த மேலும் சில விவரங்களைப் பார்ப்போம். ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து அணிகளை ஒருங்கிணைத்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் எப்போது, எதனால் ஏற்பட்டது?1924, 1928 ஒலிம்பிக்ஸ் பந்தயங்களைத் தொடர்ந்து கால்பந்துக்காக ஓர் உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவது என்று முடிவானது.தகுதிப்போட்டி எதுவும் இல்லாமல் பங்கேற்கலாம் என்று அறிவித்தபோதும்கூட, 1930-இல் நடந்த முதலாவது உலகக் கோப்பைப் போட்டியில் அதிக நாடுகள் கலந்து கொள்ளவில்லை. தென் அமெரிக்காவில் இருந்து ஏழு அணிகள், ஐரோப்பாவில் இருந்து நான்கு அணிகள், வட அமெரிக்காவில் இருந்து இரண்டு அணிகள் என்று 13 அணிகள்தான் கலந்து கொண்டன. போதுமான அளவு வீரர்களைத் திரட்ட முடியாததும், அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து பயணிக்க வசதி இல்லாததாலும் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பங்கு பெறவில்லை.உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகைகளை முதலிலேயே தீர்மானித்திருந்தார்கள். மொத்த ஒதுக்கீடான 871 மில்லியன் டாலரில் 671 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மீதமுள்ள 200 மில்லியன் டாலரை அணிகளின் செலவினங்களுக்காக பங்குபெறும் அனைத்து அணியினருக்கும் பிரித்துக் கொடுப்பது என்று தீர்மானித்தனர். வெற்றி பெறும் அணிக்கு 52. 5 மில்லியன் டாலர் கிடைத்தது என்றால், பங்குபெற்ற ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 12.5 மில்லியன் டாலர் கிடைக்கப் பெற்றன.உலகக் கோப்பைப் போட்டிகளில் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதிக கோல்களை அடித்தவருக்கு 'கோல்டன் பூட்'; சிறந்த கோல் கீப்பருக்கு 'கோல்டன் க்ளோவ்'; சிறந்த வீரருக்கு 'கோல்டன் பால்'; 21 வயதுக்குக் கீழே உள்ள சிறந்த வீரருக்கு 'இளைய வீரர் விருது', ஒழுக்கமாக கட்டுப்பாடுள்ள அணிக்கு ஒரு விருது என்று வழங்கப்படுகிறது. வெற்றிக் கோப்பைக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. 1930 முதல் 1970 வரையில் வழங்கப்பட்ட கோப்பையை 'ஜூலஸ் ரிமெட் ட்ராஃபி' என்று அழைப்பார்கள். பிரெஞ்சு சிற்பி அபெல் லாஃப்ளோரால், வெற்றிக்கான கிரேக்க தேவதை 'நைக்' வடிவத்தில் உருவாக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வெற்றிக்கோப்பை அது. மூன்று தடவைகள் தொடர்ந்து வெற்றி பெற்ற பிரேசில் அதை திருப்பித் தராமல் 1970-இல் தக்க வைத்துக் கொண்டது.அதைத்தொடர்ந்து 1974 முதல் இத்தாலிய சிற்பி சில்வியோ காசானிகாவால் இரண்டு மனிதர்கள் உலகை உயர்த்திப் பிடிப்பதுபோல வடிவமைக்கப்பட்ட கோப்பை வழங்கப்படுகிறது. 18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கோப்பையின் அடிப்பகுதி மாலசைட்டால் ஆனது. 36.5 செ.மீ. உயரமும், 6.175 கி.கி. எடையும் கொண்டது. வெற்றி பெறும் அணிக்குத் தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பைதான் வழங்கப்படும். பிரேசில்போல கோப்பையை அவர்களே வைத்துக் கொள்ளக் கூடாது என்பது காரணமாக இருக்கலாம்.உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர் அப்போது ஃபிஃபாவின் தலைவராக இருந்த ஜூலெஸ் ரிமெட். அவரது பெயரில் அந்தக் கோப்பை வழங்கப்பட்டது. அதற்கான செலவை அவர் கொடுத்திருக்கக்கூடும்.23-ஆவது உலகக் கோப்பைப் பந்தயங்கள் நிறைவுறும்போது, பிரான்சின் சிலியன் எம்பாப்பே, ஸ்பெயினின் லாம்ஸ்யமாஸ், போர்ச்சுகலின் ரொனால்டோ, இங்கிலாந்தின் ஹாரிகேன், பெல்லிங்ஹாம் உள்ளிட்ட வீரர்களின் அற்புதமான ஆட்டத்தை நினைவில் சேர்க்காமல் இருக்க முடியாது. அர்ஜென்டினாவின் லயோனஸ் மெஸ்ஸி? அவர்தான் ஃபிஃபா 2026-இன் 'ஹீரோ'. உலக சரித்திரம் படைத்திருக்கும் மெஸ்ஸியை மரடோனாவின் வாரிசு என்று அழைப்பதற்கான தகுதியுடன் 23-ஆவது உலகக் கோப்பை நிறைவு பெறுகிறது. 1990-க்குப் பிறகு முதன்முறையாக ஃபிஃபாவால் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கும் முதல் நான்கு அணிகளும் (பிரான்ஸ்-அர்ஜென்டினா), (ஸ்பெயின்-இங்கிலாந்து) இறுதிச் சுற்றில் மோதியது. ஃபிஃபா 2026-இல் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், 60 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதிச் சுற்று வரை வந்து, அர்ஜென்டினாவிடம் தோல்வியைத் தழுவி இங்கிலாந்து நூலிழையில் கோப்பையை நழுவ விட்டது. இது இன்னொரு திருப்பம். பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதும் எதிர்பாராதது.உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் மிகப்பெரிய புரட்சியே நடந்திருக்கிறது. 2026 ஐரோப்பிய கால்பந்து விளையாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டதன் 30-ஆவது ஆண்டு. 1996 முதல், ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வீரர்கள் எந்த நாட்டின் வீரராகவும், அந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட அனுமதிக்கப்பட்டனர். அதற்கு போஸ்மான் தீர்ப்பு என்று பெயர். அந்தத் தீர்ப்பு புதியதொரு வாசலையே திறந்து விட்டது. தென் அமெரிக்க வீரர்கள் தங்களது மூதாதையரைத் தேடி, ஐரோப்பிய வம்சாவளியாக அந்த நாட்டுக் கால்பந்து அணியில் இணைந்தனர். அதன் விளைவாக ஐரோப்பிய விளையாட்டாக இருந்த கால்பந்து என்பது உலக விளையாட்டாகி விட்டது.ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ உலகக் கோப்பைப் போட்டியில் சிறிய நாடுகளை இணைப்பது என்கிற முடிவை எடுத்தபோது, கண்டங்கள் கடந்த வரவேற்புடன் ஃபிஃபாவின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. முதன்முறையாக பத்து ஆப்பிரிக்க நாடுகள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை கலந்து கொண்டிருக்கின்றன. அந்த நாடுகளில் ஆறு நாடுகள் முதல் சுற்றுப் போட்டியில் தகுதி பெற்றன என்பது அதைவிட முக்கியமானது.தென்னாப்பிரிக்கா, மொராக்கோ, ஐவரி கோஸ்ட், எகிப்து, செனகல் ஆகியவை தகுதிச் சுற்றில் தங்களை அடையாளம் காட்டி இருக்கின்றன. காங்கோ, அல்ஜீரியா, கானா, ஆகிய நாடுகள் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி பெற்றிருக்கின்றன. அடுத்தடுத்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆப்பிரிக்க நாடுகளின் ஆதிக்கமும், வெற்றிகளும் அதிகரிக்கக் கூடும். இதுவரை ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளின் செல்வாக்கு மட்டுமே கொடிகட்டிப் பறந்தது போய், புதிய பல நாடுகள் கோப்பையை வெல்லக் களமிறங்கத் தொடங்கி இருக்கின்றன.23-ஆவது உலகக் கோப்பைப் போட்டியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின இரண்டு சின்னஞ்சிறிய நாடுகள். பல நூற்றாண்டுளாக டச்சுக் காலனிகளாக இருந்த கரீபியன் நாடு குரேகாவ். நெதர்லாந்தின் ஒரு சுதந்திரப் பகுதியாக 2010-இல் உருவான குரேகாவின் மொத்த மக்கள் தொகையே சுமார் ஒன்றரை லட்சம்தான். நமது புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தைவிட சிறியது.அந்தச் சிறிய நாட்டுக்கு உலகக் கோப்பையில் பங்குபெறும் அளவுக்குக் கால்பந்து வீரர்கள் எப்படிக் கிடைத்தார்கள்? ஐரோப்பிய காலனியான குரேகாவில் இருந்து பலர் ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குக் குடிபெயர்ந்திருந்தனர். குரேகாவ் கால்பந்து ஃபெடரேஷன், உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறிய தங்களது பிரஜைகளை தாய்நாட்டுக்காக விளையாட அழைத்தது. நல்ல கால்பந்து வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். தகுதிப் போட்டியில் அந்த அணி தேர்வானது.கேப் வெர்டே என்றொரு நாடு இருப்பதே இப்போதுதான் தெரியும். 1975-இல் போர்ச்சுகல் காலனியாக இருந்த கேப் வெர்டே விடுதலை பெற்றது. மேற்கு ஆப்பிரிக்காவில் 10 எரிமலைகள் அடங்கிய தீவுகளை உள்ளடக்கிய சிறிய நாடு அது. சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்த போர்ச்சுகல், பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 15 நாடுகளில் குடியேறிய கேப் வெர்டேவைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.23-ஆவது உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 1248 வீரர்களில் 289 பேர் தங்களது பிறந்த நாட்டுக்காக விளையாடவில்லை. மூதாதையரின் தாய் நாட்டுக்காக விளையாட முன்வந்திருக்கிறார்கள். குடியேற்றம் எல்லைகளைத் தகர்த்திருக்கிறது. வருங்காலத்தில் உலகம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு முன்னோடியாக அமைகிறது உலகக் கோப்பைக்கு விளையாடும் வீரர்களின் அணிவகுப்பு.1930-இல் முதலாவது உலகக் கோப்பைப் பந்தயத்தை ஒருங்கிணைத்த ஜூலஸ் ரிமெட் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத வகையில் மாறிவிட்டிருக்கிறது ஃபிஃபா. 39 நாள்கள் நடந்த ஃபிஃபாவின் 23-ஆவது உலகக் கோப்பைப் போட்டி, விளையாட்டு வீரர்களுக்கானதோ, கால்பந்தை பிரபலப்படுத்திய பாட்டாளி மக்களுக்கானதோ அல்ல. இப்போது அது பல பில்லியன் டாலர்களைக் கொட்டும் கார்பரேட் விளையாட்டு.இந்தியாவின் தனிமனித (பெர் காப்பிட்டா) ஜிடிபி 4601 டாலர். ஜூலை 19 நடக்கும் இறுதிச் சுற்று ஆட்டத்துக்கான டிக்கெட்டின் விலை 7,598 டாலர். அதாவது, சராசரி இந்தியனின் 20 மாத ஊதியம் என்று வைத்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்கு விற்பனையாகும் டிக்கெட்டுகள் மூலம் வசூலாகும் பணத்தைவிடப் பல மடங்கு விளம்பரங்கள் மூலம் பெறப்படுகின்றன. அது போதாதென்று, நாடுகளுக்கு விளம்பர உரிமை விற்கப்பட்டு பெரும் பணம் ஈட்டுகிறது ஃபிஃபா என்கிற உலகக் கோப்பை நிர்வாகக் குழு.இந்தியாவுக்கு வருவோம். இங்கே கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டுகளுக்கு அதிகமான வரவேற்பு இல்லை என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், கேரளமும், மேற்கு வங்கமும், வட கிழக்கு மாநிலங்களும் விதிவிலக்கு. அங்கே இப்போதும் எப்போதும் கால்பந்துதான் ஃபேவரைட் (முதன்மை ரசனை). பழைய நினைவுகள் அலைமோதுகின்றன.1986 மெக்ஸிகோ உலகக் கோப்பைதான், அப்போதைய தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்டு இந்தியர்கள் பார்த்து பிரமித்த முதலாவது உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி. எத்தனை பேர் பார்த்தார்கள் என்று தெரியாது. அப்போதெல்லாம் பார்த்ததையும், கேட்டதையும்விடப் படிப்பவர்கள்தான் அதிகம். இன்று நிலைமையே வேறு. இந்தியாவில் மட்டும் 30 கோடி பேர் உலகக் கோப்பைப் போட்டிகளைப் பார்க்கிறார்கள். இதை ஒளிபரப்ப உரிமை பெற்றிருக்கும் 'ஜீ' தொலைக்காட்சி நிறுவனம் விளம்பரத்தின் மூலம் சுமார் ரூ.250 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டக் கூடும். பத்து நொடி விளம்பரத்துக்கு ரூ. 2.25 லட்சம் முதல் ரூ. 2.75 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மஹேந்திரா, ஆப்பிள், அடிடாஸ், லாண்ட் ரோவர் உள்ளிட்ட பல நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. முந்தைய 2022 கத்தார் உலகக் கோப்பை பந்தயத்தை நேரில் பார்ப்பதற்கு இந்தியாவில் இருந்து 56,000 கால்பந்து ரசிகர்கள் சென்றார்கள் என்றால், இந்த முறை வெறும் 30,000 பேர்தான் பயணித்ததாகத் தகவல். அதற்கு ஒரு போட்டியைப் பார்ப்பதற்கு 2022-இல் ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் செலவானால், இப்போது அதுவே இரட்டிப்பாகச் சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதுதான் காரணம். அதனால் பலரும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கலாம்.இந்த முறை தொலைக்காட்சி மூலம் மட்டுமல்ல, இணையம், கைப்பேசிகள் மூலமும் போட்டிகளைப் பார்க்க முடிகிறது. கிரிக்கெட்டைப் போல அல்லாமல், பெரும்பாலான போட்டிகள் நள்ளிரவைக் கடந்துதான் ஒளிபரப்பப்படுகின்றன. அதைக் கண்விழித்துப் பார்க்கும் கால்பந்து ரசிகன், கிரிக்கெட் போல பொழுதுபோக்காகப் பார்ப்பவர் அல்லர். அதை உணர்ந்துதான், விளம்பரங்களில் பெரும் தொகை ஈட்டுகிறது ஜீ நிறுவனம்.ஜீ நிறுவனத்தை மட்டும் குறை சொல்வானேன். உலக அளவில் கால்பந்துக் கோப்பையை மையப்படுத்தி கல்ஷி, பாலிமார்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் பந்தய வணிகம் நடத்துகின்றன. அதற்கு 'ஸ்போர்ட்ஸ் கேம்ப்ளிங்' என்று பெயரிட்டுத் தமது மைதான விளம்பர வாய்ப்புகளையும் வழங்கி இருக்கிறது ஃபிஃபா. பெட்டானோ என்கிற பந்தய நிறுவனத்துடன் ஃபிஃபா இணைந்திருக்கிறது. இத்தனைக்கும் ஃபிஃபா வின் விதிமுறைகள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பந்தயங்களில் ஈடுபடுவதை அனுமதிக்கவில்லை.உலகக் கோப்பை பந்தயங்களைப் பொருத்தவரை, எதிர்பாராத வெற்றி தோல்விகள்தான் அதன் தனிச் சிறப்பு. ஸ்பெயின் அணியுடன் விளையாடி 0-0 என்று சின்னஞ்சிறிய கேட்வெர்டோ அணி சமன் செய்ய முடியும்; பெல்ஜியத்துடன் விளையாடி 1-1 கோல்களுடன் மோத முடியும்; மொராகோவால் பிரேசிலுடன் விளையாடி சமன் செய்ய முடியும். வெற்றியோ, தோல்வியோ கைகுலுக்கி நட்புறவுடன் பிரியவும் முடியும்.அதனால்தான் கால்பந்து என்பது ஓர் அழகான விளையாட்டு (ப்யூட்டிஃபுல் கேம்). அந்த விளையாட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களின் தலையீட்டுக்கு உள்ளாகிறது எனும்போது, 'அக்லி கேம்' (அசிங்கமான விளையாட்டு) ஆகி விடுகிறது. ஆனால், அதுவும் கடந்து போகும். அந்தக் களங்கம்கூட, 23-ஆவது உலகக் கோப்பை நிகழ்வுகள் குறித்த தேவையில்லாத பேசு பொருள் என்று நாம் சகித்துக் கொள்ள வேண்டும். அர்ஜென்டினாவின் 38 வயது லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகலின் 41 வயது கிறிஸ்டினோ ரொனால்டோ, க்ரோஸியாவின் 40 வயது லுகா மோட்ரிக், ஜெர்மனியின் 40 வயது மானுவல் ஹ்யூர், மெக்ஸிகோவின் 40- வயது கைவர்மோ ஓச்சால் ஆகியோர் அடுத்த 24-ஆவது உலகக் கோப்பை பந்தயத்தில் களம் காண்பது அரிது. அதனால்தான், போர்ச்சுகல் தோல்வி அடைந்தபோது, ரொனால்டோவுடன் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமே அழுதது.ரொனால்டோஇதுபற்றிச் சொல்லும்போது உலகக் கோப்பை தொடர்பான ஒரு சுவாரஸ்ய சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1950 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் உருகுவே அடித்த பந்தைத் தடுக்காததால் பிரேசில் தோல்வியைத் தழுவியது. பிரேசிலில் நடந்த உலகக் கோப்பைப் போட்டி அது. அது முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கோல் கீப்பர் பர்போசா தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை அடையாளம் கண்ட ஒரு பெண்மணி தனது பேரனிடம் அவரைக் காட்டிச் சொன்னார்- 'ஒட்டு மொத்த பிரேசிலையும் அழ வைத்தவர் இவர்'!இந்த முறையும் 48 அணிகள் பங்கு பெற்றாலும், ஆப்பிரிக்காவும் ஆசியாவும் களம் கண்டாலும் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் மட்டுமல்ல, அரை இறுதிச் சுற்றிலும் கூட ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகள்தான் முன்னேறின. அடுத்த 24-ஆவது உலகக் கோப்பையின் நிலைமை மாறி இருக்கும். திடீர் திருப்பங்களும், புதிய அதிரடிகளும் கால்பந்து உலகக் கோப்பையின் அடிப்படை குணாதிசயங்களே...2030-இல் நடக்கும் 24-வது உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஃபிஃபா நூற்றாண்டு காண்கிறது!ஃபிஃபா 2026- இல் கிடைக்க இருக்கும் மொத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? பந்தயங்களின்போது மைதானங்களில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட கட்டணங்களின் மூலம் 8.9 பில்லியன் டாலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது என்றால் மொத்த வருவாய் 13 பில்லியன் டாலருக்கும் குறையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த உலகக் கோப்பையை விட இது 73% அதிகம். இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும்,ஸ்பெயினும் என்பது வரலாற்று நகைமுரண். ஒரு காலத்தில் ஸ்பெயினின் காலனியாக இருந்த நாடு அர்ஜென்டினா. அர்ஜென்டினாவில் ஸ்பெயின் நாட்டவர்கள் பலர் குடியேறி இரண்டறக் கலந்துவிட்டனர் என்பதாலும், அந்த நாட்டின் அரசு மொழி ஸ்பானிஷ் என்பதாலும், இரண்டு நாடுகளில் யார் வெற்றிபெற்றாலும் 'ஸ்பானிஷ்' வெற்றியாகத்தான் இருக்கும். ஃபிஃபா கால்பந்துப் போட்டிகளில் இடம்பெறும் பந்துக்கும் சில சிறப்புகள் உண்டு. ஒவ்வொரு உலகக்கோப்பைப் போட்டியின் போதும் அதற்கென்று பந்துகள் வடிவமைக்கப்படும். ஒவ்வொரு போட்டியின் பந்தும் தனித்தன்மை வாய்ந்தது.23-ஆவது உலகக் கோப்பைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் பந்துக்கு 'ட்ரையோண்டா' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தும் போட்டி என்பதைக் குறிப்பிடும் வகையில் மூன்று அலைகள் என்று பொருள்படும் ஸ்பானிஷ் வார்த்தையான 'ட்ரையோண்டா' என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் பந்தில் காணப்படும் பச்சை நிறம் மெக்ஸிகோவையும், நீலம் அமெரிக்காவையும், சிவப்பு கனடாவையும் குறிக்கின்றன. அந்த நாடுகளை அடையாளப்படுத்தும் விதமாக கழுகு (அமெரிக்கா) நட்சத்திரம் (மெக்ஸிகோ) மேப்பிள் இலை (கனடா) ஆகியவை அதில் பொறிக்கப்பட்டுள்ளன. தங்கத்தால் ஆன சாம்பியன் கோப்பையைப் பிரதிபலிக்கும் விதத்தில் பந்தின் வடிவமைப்பிலும் தங்க நிறம் இழையோடுகிறது.ஃபிஃபா கோப்பையின் வரலாற்றில் இதுவரை பயன்படுத்தப்பட்ட பந்துகளிலேயே இதுதான் குறைந்த பகுதிகளைக் கொண்டது 'டெட்ரா ஹெட்ராஸ்' வடிவத்தில் நான்கு பகுதிகள் உருவாக்கப்பட்டு அவற்றை ஒன்றிணைத்து பந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது காற்றடிக்கப்பட்ட வெறும் பந்தல்ல என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. ஃபிஃபா 2026-க்காகவே வடிவமைக்கப்பட்ட கால்பந்துக்குள்ளே பொருத்தப்பட்டிருக்கும் நுண்ணுணரி (சென்ஸார்) பந்தின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்கிறது. பந்து ஒவ்வொரு பாத தொடுதலுக்கு உள்ளாகும்போதும், அந்த நுண்ணுணரி அனுப்பும் சமிக்ஞைகளின் அடிப்படையில், நடுவர்களால் (ரெஃப்ரீஸ்) கண்டறிய முடியாத 'ஹேண்ட் பால்', 'ஆஃப் சைட் கோல்' உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு தீர்வுகாண முடியும். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் பந்து மின்னேற்றம் (சார்ஜ்) செய்யப்படுகிறது. ஈரம் பட்டால் வழுக்கிக் கொண்டு செல்லாத வகையிலும், காற்றில் திசை மாறாமல் இருக்கும் வகையிலும் பந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஃபிஃபா 2026- இல் கிடைக்க இருக்கும் மொத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? பந்தயங்களின்போது மைதானங்களில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட கட்டணங்களின் மூலம் 8.9 பில்லியன் டாலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது என்றால் மொத்த வருவாய் 13 பில்லியன் டாலருக்கும் குறையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த உலகக் கோப்பையை விட இது 73% அதிகம்.