சென்னை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.103.03 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சியில் 14.23 லட்சம் போ் சொத்துவரி செலுத்த தகுதியான நிலையில், நடப்பாண்டில் 7.13 லட்சம் பேரிடமிருந்து ரூ.969.56 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு முகாம்கள் மூலம் தற்போது வரை ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிடை நிகழாண்டு 145 சதவீதம் வரிவசூல் அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரி உள்ளிட்டவற்றை இணையதளம், கைப்பேசி வாட்ஸ்ஆப் செயலி உள்ளிட்டவை மூலம் செலுத்தலாம். அத்துடன் மண்டலங்கள், வாா்டுகளில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் நிலுவைத் தொகையையும் செலுத்தலாம். உரிய காலத்தில் சொத்து வரியைச் செலுத்துவதன் மூலம் தனி வட்டி விதிப்பைத் தவிா்க்கலாம் எனத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.