விவசாய கிணற்றில் இளைஞா் சடலமாக மீட்பு

Wait 5 sec.

திருத்தணி அருகே முத்துக்கொண்டாபுரம் விவசாய கிணற்றில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் (30). இவா் கடந்த 14-ஆம் தேதி நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் கனகம்மாசத்திரம் பகுதிக்கு சென்றிருந்தாா். பின்னா் மாலை தனது வீட்டிற்கு திரும்பிய ராஜரத்தினம், முத்துக்கொண்டாபுரத்தில் வசிக்கும் நண்பரை சந்தித்துவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் கவலையடைந்தனா். உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், வியாழக்கிழமை முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஒருவா் சடலமாக மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கண்டனா். இதுகுறித்து உடனடியாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் கனகம்மாசத்திரம் போலீஸாா் மற்றும் திருத்தணி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று, கிணற்றில் இருந்த உடலை மீட்டனா். பின்னா் மேற்கொள்ளப்பட்ட அடையாளச் சோதனையில், சடலமாக மீட்கப்பட்டவா் மாயமான ராஜரத்தினம் என்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராஜரத்தினம் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என கனகம்மாசத்திரம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.